நீதிமன்றத்திற்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி கோர்ட் புறக்கணிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டியில் ஒருங்கிணைந்த நீதி மன்றத்திற்கு கட்டடம் கட்ட, அரசு விரைவாக நிதி ஒதுக்கீடு கோரி, 5 நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்வதாக, வக்கீல் சங்கம்

அறிவித்துள்ளது.


இதுகுறித்து, பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல்கள் சங்க தலைவர் கோபி, வெளியிட்டுள்ள அறிக்கை:
பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள், கடந்த, 2008 முதல் செயல்பட்டு வருகிறது. இவை கடந்த, 17 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் எவ்வித வசதியுமின்றி தற்போது வரை இயங்குகிறது. பாப்பிரெட்டிப்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட நீதி மற்றும் வருவாய்த்துறை மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டது. இது உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
கடந்த ஆக., 11ல் தமிழக தலைமை செயலருக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரை வக்கீல் சங்கம் நேரிடையாக சந்தித்து கோரிக்கை வைத்தும், கட்டடம் கட்ட நிதி ஒதுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, அரசு நிதி ஒதுக்கீட்டை விரைவாக வழங்கி, ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்ட வலியுறுத்தி, வரும், 3 முதல், 7ம் தேதி வரை, 5 நாட்கள் வக்கீல்கள் கோர்ட் பணிகளை புறக்கணித்து விலகியிருப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement