அமெரிக்காவில் ரூ.4,200 கோடி கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழிலதிபர் தலைமறைவு

1

வாஷிங்டன்: அமெரிக்காவில், தொலைதொடர்பு நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளியான பங்கிம் பிரஹம்பட், போலியான ஆவணங்கள் தயாரித்து 4,200 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதாக செய்தி வெளியாகி உள்ளது.

குஜராத்தில் பிறந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர் தொழிலதிபர் பங்கிம் பிரஹம்பட். இவர் நியூயார்க்கில், 'பிராட்பண்ட் டெலிகாம்' மற்றும் 'பிரிட்ஜ்வா ய்ஸ்' ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார்.

கடந்த 2023ல் தொலைதொடர்பு துறையில் திறன் மிக்க, 100 மனிதர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இவர் தன் நிறுவனத்தின் பெயரில், 2020 முதல் கடன் வாங்க துவங்கினார். இதற்கான வருவாய் ஆதாரங்கள், வாடிக்கையாளர் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அமெரிக்க தனியார் நிதி நிறுவனமான, 'பிளாக்ராக்'கிடம் சமர்பித்தார்.

அதன் அடிப்படையில் பங்கிமின் நிறுவனம், 2021 வரை 3,400 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த கடன் தொகை, 2024ல், 4,200 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஜூலையில், 'பிளாக்ராக்' நிறுவனம் அவரது கணக்குகளை ஆய்வு செய்த போது, கடன் பெறுவதற்காக போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

மேலும், கடனுக்கான அடமான சொத்துக்களை மொரீஷியஸ் மற்றும் இந்தியாவில் உள்ள கணக்குகளுக்கு மாற்றியது தெரிந்தது.

இது குறித்து, 'பிளாக்ராக்' நிறுவனம் ஆகஸ்டில், பங்கிம் மீது வழக்கு பதிந்தது. அதே மாதம் அவர் தன் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கினார்.

இந்நிலையில், அவர் மீதான வழக்கு குறித்து விசாரிக்க அதிகாரிகள் பங்கிமின் நியூயார்க் வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது.

விலையுயர்ந்த கார்கள் துாசி படிந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளன.

அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கருதுகின்றனர்.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement