போக்குவரத்துத்துறையில் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மதுரை: போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சார்பில் நவ.5ல் மாநில அளவில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு கூட்டம் மதுரையில் நடந்தது.

மாநில தலைவர் விஜயகுருசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கோபிராஜன், துணைத் தலைவர் அபுபக்கர் சித்திக், மண்டல செயலாளர் சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேசினார்.

பதவி உயர்வு மூலம் காலியாக உள்ள உதவியாளர், கண்காணிப்பாளர், மோட்டார் வாகன ஆய்வாளர், நேர்முக உதவியாளருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் சோதனை சாவடிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வட்டார போக்குவரத்து அலுவலர் பதவி உயர்விற்கு 4:1 என்ற விகிதத்தில் தயாரிக்கும் தகுதியானோர் பட்டியலை அமைச்சுப் பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தனியாக தயாரிக்க வேண்டும். இடமாறுதல்கள் கலந்தாய்வு மூலம் பிறர் தலையீடு இன்றி குறித்த காலத்தில் கமிஷனரால் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement