நீர் வரத்து பாதைகளில் ஆக்கிரமிப்பு, கழிவுகளால் பாதிப்பு; மண்வளம், நீர்வளம் மாசுபடும் அபாயம்
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநில, மாவட்ட, கிராமப்புற சாலைகளின் இருபுறமும் உள்ள நீர் வரத்து பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், கழிவுகள் கொட்டப்பட்டும் வருவதால் மண்வளம், நீர் வளம் மாசுபட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகள், கண்மாய்கள், நீர்த்தேக்கங்கள் நிரம்பும் பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் அடுத்தடுத்து வழித்தடங்களில் உள்ள கண்மாய்களுக்கு சென்று நிரம்பும் வகையில் நீர் வரத்து பாதைகள் உள்ளன.
இத்தகைய நீர் வரத்து பாதைகளில் பல ஆண்டுகளாக தனி நபர்கள், வணிக நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் குப்பையை கொட்டுவதால் பல அடி ஆழமுள்ள நீர் வரத்து பாதைகள் மண் மேவி அடைபட்டு கிடக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகள் கரைகளின் இருபுறமும் கழிவுகளை ஒதுக்கி தான் உள்ளனரே தவிர அப்புறப்படுத்தவில்லை.
இந்நிலையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் சேரும் குப்பையை இத்தகைய நீர்வரத்து பாதையில் கொட்டப்பட்டு வருகின்றனர்.
இதே போல் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் மதுரை-- கன்னியாகுமரி, மதுரை --தூத்துக்குடி, திருமங்கலம்- -ராஜபாளையம் நான்கு வழி சாலைகள், மாநில மாவட்ட கிராமப்புற சாலைகளின் இருபுறமும் இருக்கும் நீர் வரத்து பாதைகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சமப்படுத்தி, நீர்வரத்து பாதைகளை முழு அளவில் அடைத்து விட்டனர்.
இதனால் மழை தண்ணீர் கண்மாய்களுக்கு செல்லாமல் ரோடுகள் வழியாக தான் செல்கிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும், கன்மாய்கள் நிரம்பாத நிலை தான் ஏற்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் நீர்வரத்து ஓடைகளை ஒட்டிய நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணன் கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டிலும், நத்தம் பட்டி, அழகாபுரி வழியாக மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் இருந்த நீர் வரத்து பாதைகள் மண்மேவி சமப்படுத்தப்பட்டு பாலத்தின் கண்கள் மட்டும் தான் தெரிகிறது.
இதேபோல் மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ரோட்டின் இருபுறமும் உள்ள நீர்வரத்து பாதைகள் அடைபட்டு காணப்படுகிறது.
இதனை முழு அளவில் அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர்வரத்து பாதைகள் காணாமல் போகும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப் பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தி நீர் வரத்து பாதைகளை காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
மேலும்
-
சிக்னலில் நின்றிருந்த 3 பைக்குகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் பலி
-
சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்
-
ரூ.50 லட்சம் கொள்ளை: மேலும் ஒருவர் கைது
-
'நாங்கள் போரில் பிஸியாக இருப்பதையே இந்தியா விரும்புகிறது' :புலம்புகிறார் பாக்., ராணுவ அமைச்சர்
-
கஞ்சா விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
-
'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது'