பொதுக்கூட்ட அனுமதிக்கான விதிமுறைகள் சமர்பிக்க வரும் 20 வரை அரசுக்கு ஐகோர்ட் கெடு
சென்னை: அரசியல் கட்சி தலைவர்களின் பொது கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க, பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு விதிமுறைகளை சமர்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உ த்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின், 'ரோடு ஷோ', பொது கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி, துாத்துக்குடியை சேர்ந்த திருக்குமரன், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் த.வெ.க., தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதாடியதாவது:
பொது கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக, நவ., 6ல் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
தேர்தல் கமிஷனில் பதிவு செய்த 40க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கும், இந்த வரைவுகள் அனுப்பப்பட்டு, அக்கட்சிகளின் கருத்துகளும் கோரப்பட்டு உள்ளன. அக்கருத்துகளைப் பெற்று இறுதி வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
த.வெ.க., தரப்பு வழக்கறிஞர் அறிவழகன், ''ஏற்கனவே, த.வெ.க.,வுக்கு மட்டுமே, 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கு அல்ல,'' என்றார்.
அதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'த.வெ.க., தங்கள் தொண்டர்களை மின்மாற்றிகளில் ஏறக்கூடாது என, அறிவுறுத்த வேண்டும்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 'ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு விதமாக நிபந்தனை விதிக்கப்படுகிறதா' என, கேள்வி எழுப்பினார்.
பின், அவர் தன் உத்தரவில், ''அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு அனுமதி கோரி, 15 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கும்பட்சத்தில், 5 முதல் 7 நாட்களில் முடிவெடுத்து, அரசு தெரிவிக்க வேண்டும்.
அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் பரிசீலித்து பத்து நாட்களில், வரைவு நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்,'' எனக் கூறி, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும்
-
இலங்கையின் புலிகள் அமைப்பை புனரமைக்க கராச்சிக்கு ஹவாலா மூலம் நிதி அனுப்பியது அம்பலம்
-
வெடித்து சிதறிய காரை ஓட்டியவர் புல்வாமா டாக்டர்
-
டில்லி தாக்குதல் நெட்வொர்க்கில் ஈடுபட்டவர்கள்... டாக்டர்கள்! பெரிய பதவிகளில் அமர்ந்து சதித்திட்டம் தீட்டுகின்றனர்
-
'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வணிகம் ரூ.22 லட்சம் கோடியை தாண்டியது
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்வு
-
525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவி