வெடித்து சிதறிய காரை ஓட்டியவர் புல்வாமா டாக்டர்

ஸ்ரீநகர்: டில்லியில், செங்கோட்டையில் வெடித்து சிதறிய காரை, ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி ஓட்டி வந்ததும், தன் கூட்டாளிகள் கைதானதால், தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், இந்த தற்கொலைப்படை தாக்குதலை அவர் நடத்தியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:



குண்டுவெடிப்புக்கு காரணமான, 'ஹூண்டாய்' நிறுவனத்தின் வெள்ளை நிற 'ஐ20' காரை, ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி ஓட்டியுள்ளார். சம்பவத்தின் போது, காரில் அவர் மட்டுமே இருந்துள்ளார்.

குண்டுவெடிப்புக்கு முன், அந்த கார் அருகே உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம்.

பரிதாபாதில், தன் கூட்டாளிகளான டாக்டர்கள் முஸாமில் கனி, ஷாஹீன் சயீத் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த உமர் நபி, தானும் கைதாகலாம் என்ற அச்சத்தில், இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம்.

இச்சம்பவத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். இதை உறுதிப்படுத்த அவரது தாயாரிடம் இருந்து மரபணு மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் டாக்டராக பணிபுரிந்த உமர் நபி, கைதான மற்றொரு டாக்டரான அடிலின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement