விருதுநகரை உலுக்கிய கோவில் காவலாளிகள் கொலை வழக்கு: ஒருவர் சுட்டுப்பிடிப்பு

6


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே நள்ளிரவில், கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த இரு காவலாளிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாகராஜ் என்பவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சுட்டுப்பிடிக்கப்பட்டார்.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில், சேத்துார் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு பணியில் காவலாளிகளாக அப்பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து, 50, சங்கரபாண்டியன், 65, ஆகியோர் பணிபுரிந்தனர்.

பகல் நேர காவலாளி மாடசாமி, 65, நேற்று காலை, 6:45 மணிக்கு கோவிலுக்கு சென்ற போது, காவலாளிகள் இருவரும் கழுத்து, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கோவிலுக்குள் இருந்த சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, கேமரா பதிவு டி.வி.ஆர்., கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.



தடயவியல் நிபுணர்கள் கோவிலில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் இன்று (நவ.,12) இரட்டை கொலையில்
வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ்(25) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். திருடப்பட்ட பொருட்களை எடுப்பதற்காக குற்றவாளியை சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.



அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, எஸ்.ஐ கோட்டியப்பசாமியை வெட்டி விட்டு குற்றவாளி தப்ப முயன்றார். உடன் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் குற்றவாளியை காலில் சுட்டுப்பிடித்தார்.


காயமடைந்த குற்றவாளியை மீட்ட போலீசார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement