விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு

7


புதுடில்லி: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி நடிகர் விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளது. புதியதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் எதன் அடிப்படையில் வழங்கப்படும் என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல்.


தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி, மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், தனது முதல் தேர்தலுக்குத் தயாராகி வரும் நடிகர் விஜயின் தவெக, தேர்தலில் போட்டியிட விசில் சின்னத்தைக் கோரி இந்திய தேர்தல் கமிஷனை அணுகியுள்ளது.

தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 1968ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணைப்படி, புதுடில்லியில் உள்ள தேர்தல் கமிஷனிடம், விசில், ஆட்டோரிக்ஷா மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்களின் பட்டியலுடன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
விருப்பத்தேர்வு சின்னங்களின் பட்டியலில் முதலிடத்தில் விசில் சின்னம் உள்ளது.



அவர்கள் முன்னுரிமை பட்டியலில் கொடுத்துள்ள 10 சின்னங்களில் ஏழு சின்னம் புதிதாக பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் இலவச சின்னங்களின் பட்டியலில் உள்ளன என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பொதுவான சின்னங்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.


இது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: சுவர்களில் வரைவது எளிதாகவும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தெளிவாகத் தெரியும் வகையிலும் சின்னம் ஒதுக்கப்படுவது வழக்கம்.


வேட்பாளர் பெயர்களைப் போலவே சின்னங்களும் முக்கியம். வடிவமைப்பின் எளிமை மற்றும் தெளிவுத்திறன், வாக்காளர் மத்தியில் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விசில் பின்னணி என்ன?



கடந்த 2019ம் ஆண்டு விஜய் நடிப்பில் தமிழ் படம் 'பிகில்' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது. அதேநேரத்தில், இந்த படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகி இருந்தது.





அதேபோல், கடந்த 2024ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில், 'சத்தம் பத்தாது விசில்போடு' என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. விசில் சின்னத்தை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும் என தவெக தலைவர் விஜய் கருதுகிறார். இதுவே விஜயின் தவெக விசில் சின்னம் கோரி இருப்பதற்கு பின்னணியாக கருதப்படுகிறது.

சின்னங்கள் பெறுவது எப்படி?



அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு தேர்தல் கமிஷன் தயாரித்து வைத்துள்ள பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும்.

சட்ட விதி



* புதிய பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட பொதுவான சின்னங்களை தேர்தல் கமிஷனிடம் மனு அளித்து பெறலாம்.



* தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கோரிக்கைகளை ஆய்வு செய்வார்கள். ஏற்கனவே கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சின்னங்களை நகலெடுப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேவைப்பட்டால் விளக்கங்களை கேட்பார்கள்.


* தேர்தல் அறிவிப்புக்கு முன், சரிபார்ப்புக்குப் பிறகு, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கப்படும்.

Advertisement