ஆட்சியை வீழ்த்த முடியாது என்று அதிகார மயக்க முழக்கம்; முதல்வர் குறித்து விஜய் விமர்சனம்

10

சென்னை: தவெகவின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், 'எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது' என்கிற அதிகார மயக்க முழக்கம் விட்டதாக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை; சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது. அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?

நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் 'எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது' என்கிற அதிகார மயக்க முழக்கம்.

தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர். போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?

யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?

ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்? அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?

53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?

பவளவிழா பாப்பா - நீ
பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா
நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து
நாடே சிரிக்கிறது பாப்பா.

நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது. எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement