டில்லி குண்டுவெடிப்பு: சதிச்செயல் செய்ய டாக்டர்களை கூர் தீட்டிய சதிகாரன் கைது

49


புதுடில்லி: சதிச்செயல் நிகழ்த்த டாக்டர்களுக்கு பின்னணியில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் ஊழியரான இமாம் (மதகுரு) இர்பான் அகமது கைது செய்யப்பட்டுள்ளான்.

டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல் நெட்வொர்க்கில் ஈடுபட்டவர்கள் அனைவரும் டாக்டர்களே என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த குண்டு வெடிப்பு, சம்பவத்தில், புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் கனி, உ.பி.,யின் லக்னோவைச் சேர்ந்த ஷஹீன் சயீத், ஜம்மு - காஷ்மீரின் குல்காமை சேர்ந்த அதீல், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை டாக்டர் தஜமுல் ஆகிய 6 டாக்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.



சதிச்செயல் நிகழ்த்த டாக்டர்களுக்கு பின்னணியில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் ஊழியரான இமாம் (மதகுரு) இர்பான் அகமதுவை கைது செய்து உளவுத்துறை அதிகாரிகள் கிடுக்கிடிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சதிகாரன், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஊக்கம் அளித்து உதவி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


டில்லி சம்பவத்தின் ஒரு பகுதியாக அகமது வீட்டில், காஷ்மீர் போலீசார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை முடிவில் தான் சதிகாரன் இமாம் இர்பான் அகமது சிக்கியுள்ளான்.


இவன் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அகமது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில், பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபட திட்டம் தீட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அக்டோபர் 19ம் தேதி நவ்காமின் பன்போராவில் உள்ள சுவர்களில், பாதுகாப்பு படையினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெயரைக் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்த பிறகு இமாம் இர்பான் அகமது உளவுத்துறை அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் வந்தான்.

செங்கோட்டை குண்டுவெடிப்பை நடத்தியதாக கைது செய்யப்பட்ட டாக்டர் முகமது உமரின் நெருங்கிய உதவியாளரான டாக்டர் முஸம்மில் ஷகீலுடன் இமாம் இர்பான் அகமதுவுக்கு தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

Advertisement