மியான்மர் சைபர் மோசடி மையங்களுக்கு ஆள் கடத்தல்: மோசடி முகவர்கள் இருவரை கைது செய்தது சிபிஐ

புதுடில்லி: மியான்மரில் உள்ள சைபர் மோசடி மையங்களுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட முகவர்கள் இருவரை சிபிஐ கைது செய்தது.
மியான்மரில் அமைந்துள்ள சைபர் குற்ற மோசடி மையங்களுக்கு இந்தியர்களை கடத்தியது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த வழக்குகள் மனித கடத்தல் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவை, அவை ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். சமீபத்தில், சைபர் மோசடியால் பாதிக்கப்பட்ட பலரை மியான்மரில் இருந்து மீட்க இந்திய அரசு உதவியுள்ளது.
வெளிநாட்டு மோசடி மையங்களின் சார்பாக செயல்படும் பல முகவர்களை அடையாளம் கண்டுள்ளோம்.

மியான்மரில் உள்ள சைபர் மோசடி மையங்களுக்கு, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலிருந்து ஆட்களை கடத்திய இரண்டு முகவர்கள், மீட்கப்பட்ட நபர்களுடன் இந்தியாவுக்கு திரும்புவதை கண்டறிந்தோம். அவர்கள் இந்தியா வந்தவுடன் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
அதிக ஊதியம் தரும் வேலைகள் மற்றும் வெளிநாடுகளில் கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகள் போன்ற பொய்யான வாக்குறுதிகள் மூலம் இந்த நபர்களை ஏமாற்றி கவர்ந்து இழுக்கிறார்கள்.

அவர்கள்,இந்தியாவிலிருந்து சென்றவுடன், மியான்மருக்கு திருப்பி விடப்படுகிறார்கள், அங்கு அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு, சைபர் அடிமையாக நடத்தப்படுகின்றனர்.சைபர் மோசடி நடவடிக்கைகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

மிரட்டல், சிறைவாசம் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வந்தாலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேலை தேடுவோரை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement