இந்திய அணியில் ரிஷாப், துருவ் * இரண்டு கீப்பர்களுக்கு இடம்
கோல்கட்டா: கோல்கட்டா டெஸ்டில் களமிறங்கும் இந்திய அணியில் ரிஷாப் பன்ட், துருவ் ஜுரெல் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம் பெற உள்ளனர்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் (மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா கோப்பை) பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. சுப்மன் கில் சொந்தமண்ணில் முதன் முதலாக இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக களமிறங்குகிறார்.
இதற்குத் தயாராகும் வகையில் இரு அணி வீரர்களும், ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே களமிறங்கும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இரண்டு 'கீப்பர்'
கடந்த ஜூலை மாதம் நடந்த, மான்செஸ்டர் டெஸ்டில், இங்கிலாந்தின் வோக்ஸ் வீசிய பந்து தாக்கியதில், ரிஷாப் பன்ட் வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட ரிஷாப், தென் ஆப்ரிக்க 'ஏ' அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். இதனால் விக்கெட் கீப்பராக ரிஷாப் இடம் பெறுவது உறுதி.
வாய்ப்பு ஏன்
இதனிடையே மற்றொரு விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் 24, கடந்த செப்டம்பர் மாதம் முதல் பங்கேற்ற ஐந்து முதல் தர போட்டியில், நான்கு சதம் (140, 56, 125, 44, 132, 127) அடித்தார். சராசரி 58.00 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 'ஆல் ரவுண்டர்' நிதிஷ் குமாருக்குப் பதில், பேட்டராக துருவ் ஜுரெல் இடம் பிடிக்க உள்ளார்.
யாருக்கு 'கல்தா'
இதுகுறித்து இந்திய அணி துணை பயிற்சியாளர் டென் டஸ்காட்டே 45, கூறியது:
கோல்கட்டா டெஸ்டில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணி குறித்து திட்டமிட்டு வருகிறோம். இதில் ரிஷாப், ஜுரெல் என இருவரையும் சேர்க்காமல் இருக்க முடியாது. ஏனெனில், கடந்த ஆறு மாதத்தில் ஜுரெல் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளார். பெங்களூருவில் கடந்த வாரம் இரண்டு சதம் அடித்தார். இவர் தென் ஆப்ரிக்க தொடரில் களமிறங்குவது உறுதி.
நிதிஷ் குமாரைப் பொறுத்தவரையில், கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரு டெஸ்டிலும் பங்கேற்றார். எதிர்கால அணியை தயார் செய்யும் வகையில் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியாவில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரம், இன்னும் அவரை கற்றுக் கொண்டிருக்கும் வீரராகத் தான் பார்க்கிறோம். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.
எனினும், அணி என்று வரும் போது, போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியம். தென் ஆப்ரிக்க தொடரின் முக்கியத்துவத்தையும் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூவர் கூட்டணி
கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் டெஸ்டில் நிதிஷ் குமார், 4 ஓவர் பந்து வீசி, விக்கெட் வீழ்த்தவில்லை. இரண்டாவது டெஸ்டில் 43 ரன் எடுத்தார். பந்து வீசவில்லை. இதனால் கோல்கட்டா டெஸ்டில் வாஷிங்டன், அக்சர் படேல், ஜடேஜா என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படலாம்.
டஸ்காட்டே கூறுகையில்,'' வாஷிங்டன், அக்சர் படேல், ஜடேஜா என மூவரும் என்னை பொறுத்தவரையில் பேட்டர்கள் தான். இதனால் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது,'' என்றார்.
சுழல் வலை
இந்திய அணி கடந்த ஆண்டு சொந்தமண்ணில் 0-3 என நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது. அஜாஸ் படேல் (15), சான்ட்னர் (13), பிலிப்ஸ் (8) என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இணைந்து 36 விக்கெட் சாய்த்தனர்.
இதுபோல தற்போது வந்துள்ள தென் ஆப்ரிக்க அணியில் மூன்று 'ஸ்பெஷலிஸ்ட்' உட்பட 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த இரு டெஸ்டில் ஹார்மர் (13), சேனுரன் முத்துசாமி (11), மஹாராஜ் (9) இணைந்து 33 விக்கெட் சாய்த்தனர். இந்தியாவிலும் மூன்று சுழல் பவுலர்களுடன் களமிறங்க தயாராக உள்ளது.
இதுகுறித்து டஸ்காட்டே கூறுகையில்,'' நியூசிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்வியால் நன்கு பாடம் கற்றுள்ளோம். சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என சில திட்டங்கள் வைத்துள்ளோம். ஏனெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் எந்த ஒரு தொடரையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சற்று சறுக்கினாலும், பின் பைனல் செல்வது கடினமாகி விடும்,'' என்றார்.
வெல்ல வேண்டும்
தென் ஆப்ரிக்க அணி இந்திய மண்ணில் 19 டெஸ்டில் பங்கேற்றது. இதில் இந்தியா 11ல் வென்றது. 5ல் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் 'டிரா' ஆனது.
* கடந்த 2000ல் 2-0 என இங்கு தொடரை வென்றது. இதன் பின் பங்கேற்ற 5 தொடரில் இந்தியா 3ல் வென்றது. 2 'டிரா' ஆனது.
* கடந்த 2010 பிப்ரவரி மாதம் நாக்பூர் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இதன் பின் ஒரு டெஸ்டிலும் இந்தியாவை வென்றது இல்லை.
இதுகுறித்து தென் ஆப்ரிக்காவின் மஹாராஜ் கூறுகையில்,'' இந்தியாவை அதன் சொந்தமண்ணில் வெல்ல வேண்டும் என்பது எங்களது லட்சியமாக உள்ளது. இது கடினமான தொடராக இருக்கும்,'' என்றார்.
இந்தியா 'ஏ' அணியில் நிதிஷ்
இந்தியா 'ஏ', தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிகள் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடக்கிறது. திலக் வர்மா கேப்டனாக களமிறங்குகிறார். அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் உள்ளிட்டோர் இந்திய அணிக்காக களமிறங்குகின்றனர். இதனிடையே நேற்று இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிதிஷ் குமார், இப்போட்டியில் பங்கேற்க உள்ளார்.