பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கும் கண்டக்டர்
காரைக்குடி: காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சில் பயணிகளை இன் முகத்துடன் கைகூப்பி வரவேற்கும் கண்டக்டர் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
பஸ்சில் ஏறினாலே, சில்லறை எடுத்து வச்சுக்கோ. சில்லறை இல்லாத ஆளு கீழே இறங்கு என்ற வசனங்களை தான் நாம் கேட்டிருப்போம். கண்டக்டர் வரும் வரை பதட்டத்துடனேயே இருக்க வேண்டியிருக்கும்.
அதை மாற்றி பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளார் கண்டக்டர் நவநீதகிருஷ்ணன்.
காரைக்குடி- மதுரை பஸ்சில் கண்டக்டராக இருக்கும் இவர் பயணிகளை கைகூப்பி வணங்கி, இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன், என்று வரவேற்கிறார்.
தொடர்ந்து பஸ் நிறுத்தங்கள், பஸ் கட்டணங்கள் குறித்து கூறிவிட்டு, டிஜிட்டல் பேமென்ட் குறித்தும் எளிதாக பணப்பரிவர்த்தனை குறித்தும் பயணிகளிடம் விளக்கம் அளிக்கிறார்.
கண்டக்டர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், பயணிகள் பலவித சிந்தனைகளில் பஸ்சில் ஏறுவார்கள். அதே சிந்தனையில் அவர்கள் பயணம் செய்வதை மாற்றி அவர்களின் எதிர்மறையான எண்ணங்களை கூட எனது பேச்சால் நேர்மறையாக மாற்றுகிறேன். இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் தேவையில்லாமல் ஏற்படும் வாக்குவாதம் குறையும். பயணிகளே தாமாக முன்வந்து சில்லறை கொடுப்பார்கள். இதை நான் பணிக்கான சேவையாக செய்கிறேன்.