மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கவில்லை: துரைமுருகன் விளக்கம்

4

சென்னை: ''மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது. இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை'' என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை. தமிழக அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழக அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.


இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று (நவ.,13) மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழக அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தியதைப் போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழக அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.


இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது. இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை. காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.


காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறியும். இவ்வாறு அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.

Advertisement