'பா.ம.க., ராமதாஸ் உழைப்பை அன்புமணி திருட முடியாது'

சென்னை: ''மகன் என்பதற்காக, ராமதாசின், 46 ஆண்டு கால உழைப்பை, அன்புமணி திருட முடியாது,'' என, சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் தெரிவித்தார்.

சேலத்தில், அவர் அளித்த பேட்டி:

பா.ம.க.,வில் அன்புமணி என்றைக்கு தலையிட ஆரம்பித்தாரோ, அன்றிலிருந்து கட்சி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது; தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தையும் இழந்தது. பா.ம.க.,வும், மாம்பழம் சின்னமும் தனக்குதான் சொந்தம் என, அன்புமணி கூறுகிறார்.

இது ராமதாஸ் உழைப்பை திருடுவதற்கு சமம். மகன் என்பதற்காக, ராமதாசின் 46 ஆண்டு கால உழைப்பை, அன்புமணி திருட முடியாது. அதை வன்னியர் சமுதாய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

'ஜி.கே.மணியும், அருளும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ம.க., செய்தித் தொடர்பாளர் பாலு கூறியிருக்கிறார். நான் பா.ம.க., தவிர, வேறு எந்த கட்சியிலும் இருந்ததில்லை.

ஆனால், தி.மு.க., - ம.தி.மு.க.,வில் இருந்து பா.ம.க.,வுக்கு வந்தவர் பாலு. வன்னியர் சங்கத்தின் காடுவெட்டி குருவை ஏமாற்றி, ஒரு காலத்தில் அன்புமணிக்கு எதிராக செயல்பட்டவர் பாலு.

குரு மறைவுக்கு பின், அன்புமணி பக்கம் சேர்ந்த பாலு, தற்போது பா.ம.க.,வை கைப்பற்ற துடிக்கிறார். அன்புமணி கூறும் தீயசக்தி நாங்கள் அல்ல; அவர் கூடவே இருக்கும் பாலு போன்றவர்கள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

@quote@ பீஹார் தேர்தலுக்குப் பின் கட்சி ராமதாசுக்குத்தான் கடந்த, 2022ல் பொதுக்குழு நடந்தது. அதில் அன்புமணி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான தீர்மானத்தில் ராமதாஸ்தான் கையெழுத்திட்டார். அந்த தீர்மானத்தோடுதான், அன்புமணி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்துள்ளார். அதில் கட்சி அலுவலகத்தை, அவரது மனைவியின் வீட்டுக்கு மாற்றுவதாக, பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டதாக, போலி ஆவணங்களை கொடுத்துள்ளார். ஆனால், அப்படி எந்த தீர்மானமும் போடவில்லை. பின், 2025 ஏப்., 10ல், தலைவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டு விட்டார் அன்புமணி. ஆனால், ஆக., 9ல் தன்னிச்சையாக பொதுக்குழு கூட்டி, ஓராண்டு தலைவர் பதவியை நீட்டிப்பதாக அறிவித்துக் கொண்டார். பின் மீண்டும் பொதுக்குழு கூட்டி, அதன் வாயிலாக ராமதாஸ் கட்சித் தலைவரகி விட்டார். இந்த விபரங்களை, 180 பக்க ஆதாரத்துடன், தலைமை தேர்தல் கமிஷனரிடம் முறையிட்டுள்ளோம். பீஹார் தேர்தலுக்கு பின் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். அங்கீகாரம் இல்லாத கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது. சதாசிவம், தேர்தல் பணிக்குழு செயலர், பா.ம.க.,quote

Advertisement