நம்பிக்கை வைத்து வாக்கு அளித்தவர்களுக்கு தலைவணங்குகிறேன்; நிதிஷ்குமார் நன்றி

7

பாட்னா: அரசு மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கும், பிரதமர் மோடியின் ஆதரவுக்கும் நன்றி என்று நிதிஷ்குமார் கூறி உள்ளார்.



பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கொண்டாடி வருகின்றன.


சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார், மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் எங்கள் அரசின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையை வைத்து அதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடியிடம் இருந்து கிடைத்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். நமது முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தியதின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி மிக பெரும் பெரும்பான்மையை பெற்றிருக்கிறது.

மகத்தான இந்த வெற்றிக்கு, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களான சிராக் பாஸ்வான், ஜிதன்ராம் மஞ்ஜி, உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆதரவுடன் பீஹார் மேலும் முன்னேறும். நாட்டின் வளர்ந்த மாநிலங்களில் பீஹாரும் விரைவில் இடம்பெறும்.

இவ்வாறு நிதிஷ்குமார் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement