உலக விளையாட்டு செய்திகள்
அல்காரஸ் முதலிடம்
டுரின்: இத்தாலியில், உலகின் 'டாப்-8' வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. 'ஜிம்மி கானர்ஸ்' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-1 என இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தினார். 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த அல்காரஸ், ஆண்டு இறுதியில் வெளியாகும் தரவரிசை பட்டியலில் 'நம்பர்-1' இடத்தை உறுதி செய்தார். இவர், 2வது முறையாக (2022, 2025) முதலிடத்தை கைப்பற்றினார். இதற்கான கோப்பை வழங்கப்பட்டது.
'டெப்லிம்பிக்ஸ்' ஆரம்பம்
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது. இதில் 80 நாடுகளை சேர்ந்த, 3081 பேர் பங்கேற்கின்றனர். 21 விளையாட்டுகள், 209 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 111 பேர், தடகளம், பாட்மின்டன், கோல்ப் உள்ளிட்ட 11 வகையான போட்டிகளில் களமிறங்குகின்றனர். துவக்க விழா அணி வகுப்பில் இந்திய பாட்மின்டன் வீராங்கனை ஜெர்லின், மூவர்ணக் கொடி ஏந்தி வரவுள்ளார்.
ஜப்பான் வெற்றி
டொயோட்டா: ஜப்பானில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் ஜப்பான், கானா அணிகள் மோதின. இதில் மினாமினோ (16வது நிமிடம்), டோன் (60வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க, ஜப்பான் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கனடா, ஈகுவடார் அணிகள் மோதிய போட்டி (இடம்: டொரான்டோ, கனடா) கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
எக்ஸ்டிராஸ்
* சையது முஷ்தாக் அலி டிராபி ('டி-20') தொடருக்கான தமிழக அணியின் கேப்டனாக வருண் சக்ரவர்த்தி, துணை கேப்டனாக ஜெகதீசன் நியமிக்கப்பட்டனர். சாய் கிஷோர், நடராஜன், ஷாருக்கான், சிலம்பரசன் உள்ளிட்டோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
* பிரிமியர் லீக் 'டி-20' தொடருக்கான கோல்கட்டா அணியின் பவுலிங் பயிற்சியாளராக, முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ நியமனம். ஏற்கனவே இவர், 2021-23ல் கோல்கட்டா அணிக்காக விளையாடினார்.
* ஹரியானாவின் ஹிசார் நகரில், இந்திய மல்யுத்த வீராங்கனை பூஜா தண்டா, தொழிலதிபர் அபிஷேக் பூரா திருமணம் நடந்தது.
* சீனாவின் செங்குடுவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் 'பிளே-ஆப்' போட்டியில் பங்கேற்க, இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகலுக்கு, சீன துாதரகம் 'விசா' வழங்கியது.