ரொனால்டோவுக்கு 'ரெட் கார்டு': உலக கோப்பைக்கு சிக்கல்

டப்ளின்: அயர்லாந்து வீரரை கீழே தள்ளியதால் 'ரெட் கார்டு' காண்பிக்கப்பட்ட போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலக கோப்பையில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில், அடுத்த ஆண்டு (ஜூன் 11 - ஜூலை 19) 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்றில் 54 அணிகள், 12 பிரிவுகளாக விளையாடுகின்றன.


அயர்லாந்தின் டப்ளினில் நடந்த 'எப்' பிரிவு போட்டியில் அயர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் 59வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது வலது முழங்கையால் இடித்ததில் அயர்லாந்தின் டாரா ஓ'ஷியா கீழே விழுந்தார். உடனடியாக ரொனால்டோவுக்கு 'எல்லோ கார்டு' காண்பிக்கப்பட்டது. கீழே விழுந்த வீரரை நோக்கி, அழ வேண்டாம் என ரொனால்டோ சைகை செய்தார். பின், 'வார்' தொழில்நுட்ப உதவியுடன் ரொனால்டோவுக்கு 'ரெட் கார்டு' வழங்கி வெளியேற்றப்பட்டார். அப்போது அயர்லாந்து ரசிகர்கள் சிலர், அழ வேண்டாம் என ரொனால்டோவை நோக்கி சைகை செய்தனர்.
'ரெட் கார்டு' பெற்ற ரொனால்டோ, ஆர்மேனியாவுக்கு எதிரான கடைசி தகுதிச் சுற்று போட்டியில் (நவ. 16) விளையாடமாட்டார். இவரது மோசமான செயலுக்கு 2 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம். ஒருவேளை போர்ச்சுகல் அணி உலக கோப்பைக்கு தகுதி பெற்றால், முதல் போட்டியில் ரொனால்டோ பங்கேற்பது சந்தேகம்.

Advertisement