கோடை பின்னலாடை ஆர்டர்கள் கைகூடும்: உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசு

திருப்பூர்:
''மத்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளதால், கோடைக்கால ஆர்டர்களை பெற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் பயன்பெறலாம்'' என, பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


நம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்தாண்டு ஆடை ஏற்றுமதி, 1.35 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. அதில், பின்னலாடை ஏற்றுமதியின் பங்களிப்பு மட்டும், 65, 179 கோடி ரூபாய.


நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் தலைநகராக திருப்பூர் விளங்குகிறது. கடந்த நிதியாண்டு நிலவரப்படி, அமெரிக்காவுக்கு மட்டும், 22 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது; திருப்பூரில் இருந்து மட்டும், 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி நடந்துள்ளது.

ஏற்றுமதியாளர் தடுமாற்றம்




நடப்பு நிதியாண்டில், அமெரிக்க வர்த்தகம் மென்மேலும் அதிகரிக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் அதிரடியான வரி உயர்வால், அமெரிக்காவுடன் நேரடி வர்த்தகம் செய்து வந்த ஏற்றுமதியாளர்கள் தடுமாற்றம் அடைந்தனர்.


@quote@உரிய நேரத்தில் உதவிquote
ஒப்புக்கொண்ட ஆடைகளை அமெரிக்காவுக்கு அனுப்பவும் கூடுதலாக செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தொழில்துறையினரின் கோரிக்கையை தொடர்ந்து, மத்திய அரசு தத்தளிக்கும் தொழில்துறைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், வட்டி சமன்செய்யும் திட்டம் ஆகிய இரு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில், 40 ஆயிரத்து, 65 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் குறித்த விரிவான அறிவிப்பு வெளியாக உள்ளது.


தன்னம்பிக்கை ஊட்டுகிறது



அமெரிக்க வரி உயர்வால், தொழில் நிலை சிரமமாக இருப்பதால், அனைத்துவகை கடன் மீதான வசூலை, மார்ச் மாதம் வரை நிறுத்தி வைக்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்த காலவரம்புகளையும் நீட்டித்துள்ளது.

ஒரே நேரத்தில், புதிய திட்டங்கள் தொடர்பான தகவலும், வங்கி கடன் நிவாரண அறிவிப்பும் வெளியாகியுள்ளது, பரிதவித்து வந்த திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு புதிய தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் மாறியுள்ளது.

அமெரிக்க வரி உயர்வு பிரச்னையால், கிறிஸ்துமஸ் ஆர்டர், ஆங்கில புத்தாண்டு ஆர்டர் முடிந்த பிறகு, கோடைக்கால ஆர்டர்கள் கை கொடுக்குமா என்ற கவலை, ஏற்றுமதியாளர்களுக்கு இருந்தது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்புகள், புதிய உத்வேகம் அளிப்பதாக மாறியுள்ளது.

பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்தாலும், அமெரிக்கா பிரதானமாக மாறியுள்ளது. அந்நாட்டுக்கான வர்த்தகம் சீரானால், ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகமும் சீரடையும். அமெரிக்க வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், குளிர்கால ஆர்டர் கடும் சோதனையாக மாறிவிட்டது.

எப்படியோ, ஆங்கில புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் ஆர்டர்களும் முடிந்து, அனுப்பியாகிவிட்டது. அடுத்து, கோடைக்கால ஆர்டருக்கான வர்த்தக விசாரணை துவங்கியுள்ளது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்புகளால், குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வரமுடியும். இதனால், சோர்வடைந்த நிலையில் இருந்த திருப்பூர் மீண்டும் சுறுசுறுப்படையும்.

- பின்னலாடை தொழில்துறையினர்.

Advertisement