ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து பொய் பிரசாரம்; பாக்., ஊடகத்தின் முகத்திரையை கிழித்த பிரான்ஸ்

பாரிஸ்: ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவலை பரப்பி வரும் பாகிஸ்தான் ஊடகத்திற்கு பிரான்ஸ் கடற்படை கண்டனம் தெரிவித்துள்ளது.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும், அவர்களின் பயங்கரவாத முகாம்களும் சூறையாடப்பட்டன. மேலும், பாகிஸ்தானின் விமானப்படை தளங்களும் தாக்கப்பட்டன. 10 முதல் 12 பாகிஸ்தான் போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.


இந்திய ராணுவத்தின் தாக்குதலை தாக்குப்பிடிக்காத பாகிஸ்தான், போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதன் பேரில், தாக்குதல் கைவிடப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான போரில் தாங்கள் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் பொய்யான பிரசாரத்தை பரப்பி வருகிறது. மேலும், இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வந்தன.


இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியோ டிவி வெளியிட்ட பொய்யான செய்திக்கு பிரான்ஸ் கடற்படை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கடந்த நவ.,21ம் தேதி வெளியான செய்தியில், இந்திய ரபேல் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியதை பிரான்ஸ் கடற்படை கமான்டர் உறுதி செய்ததாக ஜியோ டிவி செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பிரான்ஸ் கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது.


இது குறித்து பிரான்ஸ் கடற்படை வெளியிட்ட அறிக்கையில்; இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து பிரான்ஸ் கடற்படை கமான்டர் கூறியதாக பொய்யான தகவலை பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பிரான்ஸ் கடற்படை கமான்டரின் பெயர் கேப்டன் யுவான் லானே என்பதற்கு பதிலாக ஜேக்ஸ் லானே என்று பெயரை கூட தவறாக குறிப்பிட்டுள்ளனர்.


இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து எங்கள் அதிகாரி எந்த கருத்தும் கூறவில்லை. மேலும், இதுபோன்ற செய்தியை வெளியிட கேப்டன் லானே எந்த அனுமதியும் தரவில்லை. லாண்டிவிஷியாவில் கடற்படை விமான தளத்திற்கு கட்டளை பிறப்பிக்கும் பணியை மட்டுமே கேப்டன் லானே செய்து வருகிறார். ஆனால், அவரை இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி போல் சித்தரித்துள்ளனர்.


அதேபோல, பாகிஸ்தான் ஊடகம் குறிப்பிட்டுள்ளபடி, சீன ஜே-10 விமானம் குறித்தும் கேப்டன் லானே எந்தக் கருத்தும் கூறவில்லை, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement