இஸ்ரேலை மீண்டும் மீண்டும் சீண்டும் ஹமாஸ்... பதிலடி நிச்சயம் என்கிறார் நெதன்யாகு

10


ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு, நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்து போன காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.



இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி ரயிட் சயித் உயிரிழந்தார்.



இந்த சூழலில் ராபாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹமாஸூக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்; அக்டோபர் மாதம் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். காசாவில் இருந்து போராட்டக்குழுவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதும், பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தை உருவாக்குவது தான் அதன் நோக்கம். போர் ஒப்பந்தத்தை மீறும் ஹமாஸூக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம், எனக் குறிப்பிட்டிருந்தது.



இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒரு குழந்தை உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement