நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை விரைவில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

11

புதுடில்லி: நாட்டில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை கோல்ட்டா- குவஹாத்தி இடையே விரைவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது
: பல்வேறு நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நாட்டில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை கோல்ட்டா- குவஹாத்தி இடையே விரைவில் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் கட்டணங்கள் விமானப் பயணத்தை விட கணிசமாகக் குறைவாக இருக்கும். இந்த ரயில் சேவைகள் அடுத்த 15-20 நாட்களில், அநேகமாக ஜனவரி 18 அல்லது 19ம் தேதி அன்று செயல்பாட்டிற்கு வரும்.



நாங்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், அனைத்தும் உறுதியாகிவிட்டது. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சரியான தேதியை நான் அறிவிப்பேன். குவஹாத்தியில் இருந்து கோல்கட்டாவில் உள்ள ஹவுரா விமானப் பயணத்திற்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை செலவாகும். வந்தே பாரத் ரயிலில், முதல் பிரிவு ஏசி வசதியில் பயணத்திற்கு ரூ.3,600 ஆகும். நடுத்தர வர்க்கத்தினரைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


புல்லட் ரயில் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தயாராகிவிடும். முதலில் குஜராத் மாநிலம் சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி முதல் ஆமதாபாத் வரை இயக்கப்படும். கவச் அமைப்பு செயல்படுத்தும் பணி அதிவேகமாக நடைபெற்று வருகிறது. கவச் என்பது ஒரு மிகவும் சிக்கலான அமைப்பு. உலகின் வளர்ந்த நாடுகள் 20, 25, 30 ஆண்டுகளில் செய்ததை, நாம் ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் இந்த பணியை முடித்துவிடுவோம். இது மிகவும் சிக்கலானது. அந்தச் சிக்கலானதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Advertisement