மழைநீர் வடிகால் பணிக்கு சாலையில் பள்ளம் தோண்ட வழிகாட்டுதல்கள்: 2 வாரத்தில் பதில் அளிக்க ஐகோர்ட் கெடு


சென்னை: மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளை தோண்டும்போது, சென்னை நகராட்சி, மின் வாரியம், குடிநீர் வாரியம், காவல்துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்படும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய மனுவிற்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை, கோட்டூர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள், ஒன்றரை மாதங்களாக நடந்து வருகின்றன. இந்த பணியால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாககூறி, அப்பகுதியை சேர்ந்த முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்காக சாலைகளை தோண்டும்போது, அந்த பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளின் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பின் மீண்டும் சாலை அமைக்காததால், வீடுகள் மாசடைந்துள்ளது.


போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் சாலைகளை தோண்டும்போது சென்னை மாநகராட்சி, மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், காவல்துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்படும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்.


சாலைகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் ஆகியவற்றை மீண்டும் அமைத்து தர வேண்டும். இந்தப் பணிகளால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சி, மின் வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், காவல்துறை ஆகிய துறைகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

Advertisement