போனில் தவறாக பேசிய நபரை கொன்று புதைத்த தம்பதி கைது

பொள்ளாச்சி: போனில் தவறாக பேசிய நபரை, கொன்று புதைத்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், ஆழியாறை சேர்ந்தவர் சந்திரன், 48. இவரது மனைவி காளீஸ்வரி, 39. இவர்கள், ஆனைமலை காளியாபுரம் மாட்டேகவுண்டன்புதுார் தனியார் தோட்டத்தில், மூன்று மாதங்களாக வசிக்கின்றனர்.

இரு வாரங்களுக்கு முன், ஆழியாறு மண்ணத்தை சேர்ந்த கருப்புசாமி, 45, என்பவருடன் சந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

வேறு இடத்தில் பணி இருந்தால் கூறுமாறு கருப்புசாமியிடம் கேட்ட சந்திரன், தன் மனைவியின் மொபைல்போன் எண்ணை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கருப்புசாமி, அவ்வப்போது போன் செய்து, காளீஸ்வரியிடம் தவறாக பேசியுள்ளார்.

Tamil News
Tamil News

கணவரிடம், காளீஸ்வரி கூறியுள்ளார். ஏப்., 28ல், கருப்புசாமியை தோட்டத்துக்கு அழைத்து, சந்திரன் மது அருந்தியுள்ளார்.

அப்போது, மனைவியிடம் தவறாக பேசியது குறித்து கேட்டதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், சந்திரன் கட்டையால் தாக்கியதில், கருப்புசாமி உயிரிழந்தார். சந்திரன், காளீஸ்வரி இருவரும், அவரது உடலை தோட்டத்தில் புதைத்தனர்.

இரு நாட்களுக்கு பின், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், வி.ஏ.ஓ.,வுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் பார்த்த போது, கை வெளியே தெரிந்த நிலையில், சடலம் தென்பட்டது. ஆனைமலை போலீசார், சந்திரன், காளீஸ்வரியை கைது செய்தனர்.

Advertisement