சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
சிவகங்கை:மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 5,634 கண்மாய்களில் பெரும்பாலானவை வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் இம்மாவட்டத்தில் 1.80 லட்சம் எக்டேரில் விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடி மட்டுமின்றி நிலக்கடலை, காய்கறி, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்து வருகின்றனர். விவசாயிகள் கண்மாய், கிணற்று பாசனம், மானாவாரி, வைகை, பெரியாறு ஆற்று பாசனம் மூலமும் தண்ணீர் பெற்று சாகுபடி செய்கின்றனர்.
மாவட்ட அளவில் பொதுப்பணி, ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 5,634 கண்மாய்கள் மூலம் கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் பருவ மழை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கை கொடுக்கவில்லை. நெல் நடவு நேரங்களில் மழையின்றியும், அறுவடை நேரத்தில் மழை பெய்தும் விவசாயிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியது.
பொதுப்பணித்துறை கண்மாய்களில் நீர் இருப்பு இன்றி காணப்படுகிறது. கண்மாய்களில் தேங்கிய நீரை பயன்படுத்தி தான் விவசாயிகள் ஒரு போக சாகுபடி செய்தனர். தற்போது கோடை துவக்கத்திலேயே அனைத்து கண்மாய்களும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் தண்ணீரின்றி விவசாயம் மட்டுமின்றி, மக்கள், கால்நடைகளுக்கான குடி நீர் ஆதாரம் கூட நிவர்த்தி ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கண்மாய் சீரமைப்பு அவசியம் வைகை பாசன விவசாய சங்க பொது செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: கோடை காலத்தில் வறண்டுள்ள கண்மாய்களில் பருவ மழை காலங்களில் மழை நீர் தேங்க வேண்டியது அவசியம். இதனால் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவுபடி, தற்போது வறண்டு கிடக்கும் கண்மாய்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றியும், வரத்து கால்வாய்களை துார்வாரி, கண்மாய்களை இயந்திரங்களை கொண்டு ஆழப்படுத்த வேண்டும். அப்போது தான் ஜூனில் பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை கண்மாய்களில் சேகரித்து, சாகுபடியை அதிகரிக்கலாம். இவற்றை அரசு போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்றார்.
குடியிருப்புகளுக்குள் வரும் விலங்குகள் சிங்கம்புணரி: சிங்கம்புணரி வனப்பகுதியில் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் குட்டைகளை அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இத்தாலுகாவில் சதுர்வேதமங்கலம், முறையூர், ஏரியூர், எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இங்கு மான்கள், நரி, கீரி, உடும்பு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை தவிர எஸ்.புதூர் மலைப்பகுதியில் காட்டு மாடுகள், குரங்குகள் உள்ளிட்டவையும் அதிக அளவில் திரிகின்றன. கோடை வாட்டியெடுக்கும் நிலையில் இத்தாலுகாவில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு விட்டன.
குறிப்பாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு வனவிலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மான் உள்ளிட்ட விலங்குகள் முறையூர், பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளுக்குள் படையெடுக்க துவங்கியுள்ளது. தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் அழியும் அபாயத்தில் உள்ளது. ஏற்கனவே இந்த வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் குட்டை, குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவைகள் தற்போது செயல்பாட்டில் இல்லை. எனவே மீண்டும் தண்ணீர் குட்டை, தொட்டிகளை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.