ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு; ஒரே நாளில் 41 வழக்குகள் பதிவு
கோவை: தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு கோவையில் போலீசார் தொடர் சோதனைகளை நடத்தினர். மே 3 ல் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன.
தடாகம் சாலையில் உள்ள, அரசு தொழில்நுட்ப கல்லுாரியில்(ஜி.சி.டி.) ஓட்டு எண்ணும் பணி இன்று நடக்கிறது. துணை ராணுவத்தினர் உட்பட, 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், மே 3 ம் தேதி கமிஷனர் கண்ணன் தலைமையில் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
பி.ஆர்.எஸ்.மைதானத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வும் நடத்தப்பட்டது. இதில் திடீர் கலவரம் ஏற்பட்டால் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும், தண்ணீர் பீரங்கி பயன்பாடு குறித்து ஒத்திகை நடந்தது.
மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் திடீர் சோதனைகள் நடந்தன. வெளியிடங்களில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கஞ்சா, போதைப்பொருள், மது விற்பனை, லாட்டரி உள்ளிட்ட பிரிவுகளில் நேற்று ஒரே நாளில் 41 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். ஓட்டு எண்ணும் மையங்கள் மட்டுமின்றி முக்கிய கட்சி அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்' என்றார்.