குறையும் நிலத்தடி நீர்மட்டத்தால் விவசாயிகள் எதிர்பார்ப்பு: குளிர்விக்குமா கோடைமழை
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வட்டாரத்தில் 2 ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றியதுடன், 58 கிராம கால்வாயில் 2 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாததால் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைகிறது. அக்கினி நட்சத்திரம் துவங்க உள்ள நிலையில் கோடை மழை விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி பகுதி கிராமங்களில் பருவமழை, நிலத்தடி நீரை நம்பியே மானாவாரி நிலங்கள் உட்பட பலபகுதியில் விவசாயம் நடந்து வந்தது. நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழே சென்றது.
முப்பது ஆண்டுகளாக இழுபறியில் இருந்த 58 கிராம கால்வாய்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபின் 2021, 22, 23 ஆம் ஆண்டுகளில் கால்வாயில் சோதனை ஓட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. கிடைத்த சிறிதளவு மழைநீரும் சேர்ந்து நிலத்தடி நீர்மட்டம் தரைமட்டம் அளவுக்கு உயர்ந்தது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் மானாவாரி நிலங்களில் நெல், கரும்பு, தென்னை பயிரிடத் துவங்கினர். கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் தரிசாக கிடந்த நிலங்களை விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் விவசாயிகள் இறங்கினர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யவில்லை. 58 கிராம கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. கோடையில் வெயில் கொளுத்தியது. வறண்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. தென்னை, மல்லிகை பயிர்களுக்கு தண்ணீரை விலைக்கு வாங்கி காப்பாற்றும் நிலை ஏற்பட்டது.
குளிர்விக்குமா கோடைமழை:
இந்நிலையில் 2 நாட்களாக உசிலம்பட்டி பகுதியில் கோடையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மே 1ல் செட்டியபட்டி மலைகளில் பெய்த மழையால் செட்டியபட்டி ஓடையில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து கவண்டபட்டி வழியாக குஞ்சாம்பட்டி அம்மாகுளம் கண்மாய் வரை நீர் வரத்து ஏற்பட்டது.
மே 2 ல் உசிலம்பட்டி பகுதியில் 2.5 செ.மீ., மழைப்பொழிவு கிடைத்தது. அக்கினி நட்சத்திரம் துவங்க உள்ள நிலையில், அதற்குமுன் கிடைத்துள்ள மழையால் இந்தாண்டு போதுமான அளவு மழை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம் என விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.