ஒட்டன்சத்திரம் - சென்னை இடையே அரசு பஸ் இயக்க கோரிக்கை
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கல்லுாரி, வியாபாரம், பணி நிமித்தமாக சென்னைக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு வசதியாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து அரசு பஸ் இயக்கப்படவில்லை. ஆம்னி பஸ்கள் மட்டும் அதிகம் உள்ளன.
ஒட்டன்சத்திரம் வழியாக சென்னைக்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே செல்கிறது. இதற்கு பல நாட்களுக்கு முன்பே பதிவு செய்தால் தான் டிக்கெட் கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் சென்னைக்கு செல்ல கட்டணம் அதிகமாக இருந்தாலும் வேறு வழியின்றி ஆம்னி பஸ்களில் தான் செல்ல வேண்டி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒட்டன்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு நேரடி பஸ் வசதி இருந்தது. இது பலருக்கும் பயன் உள்ளதாக இருந்தது. பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக சென்னைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஆனாலும் வார விடுமுறை நாட்கள், முக்கிய விசேஷ நாட்களில் பழநியிலேயே டிக்கெட் புக் ஆகி விடுவதால் ஒட்டன்சத்திரம் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே ஒட்டன்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.