மாவட்டத்தின் 7 தொகுதிகளின் ஓட்டுக்கள் எண்ணிக்கை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மே 4 வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், போலீசார் செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழி, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய தொகுதிகளில் மொத்தமுள்ள 15,09,518 வாக்காளர்களுக்காக 2001 ஓட்டுச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏப்.23ல் நடந்த தேர்தலில் 84.85 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை வி.எஸ்.வி.என் கல்லுாரியில் மே 4 காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்களை எண்ண அவற்றின் பதிவுக்கு ஏற்ப மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவானவற்றை எண்ணுவர். இதற்காக மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. அதிக ஓட்டுச்சாவடிகள் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதிக்கு 22 ரவுண்டுகள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.

குறைந்த அளவாக ராஜபாளையம், அருப்புக்கோட்டை தொகுதிகளில் தலா 20 ரவுண்டுகள் ஓட்டு எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கையின் போது ஒரு மேஜையில் தலா ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், மைக்ரோ அப்சர்வர், வீடியோகிராபர் இருப்பர்.

அவர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் காட்டும் ஓட்டுப்பதிவு எண்ணிக்கையை தடுப்பு வலையை அடுத்து நிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் காட்டுவர். ஒவ்வொரு ரவுண்டிலும் இயந்திரத்தில் உள்ள படி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்களை குறித்து கொண்டதும் சீல் வைத்து விடுவர். ஓட்டு எண்ணிக்கை முடிந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அறிவிக்கப்ப்படும்.

Advertisement