சர்வீஸ் ரோடு கேட்கும் விவசாயிகள்

சூலுார்: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், தங்களிடம் மீதமுள்ள நிலத்துக்கு செல்ல,சர்வீஸ் ரோடு கேட்டும், விமான நிலைய ஆணையமோ, மாவட்ட நிர்வாகமோ எந்த பதிலும் அளிக்காததால் விவசாயிகள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.

கோவை விமான நிலையம் தற்போது, 420 ஏக்கரில் உள்ளது. விரிவாக்க பணிக்காக, மேலும், 627 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 99 ஆண்டுகள் குத்தகைக்கு இந்த நிலங்கள், இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு, தமிழக அரசு வழங்கியுள்ளது. கையகப்படுத்திய நிலங்களை சுற்றி, சுற்று சுவர் கட்டும் பணி துவங்கியுள்ளது. சுற்று சுவர் கட்டுவதால், தங்களிடம் எஞ்சியிருக்கும் நிலத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என, விரிவாக்க பணிக்கு நிலத்தை வழங்கிய விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சின்னியம்பாளையம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: கோவையில் முன்பு கலெக்டராக இருந்த உமாநாத், நில உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பீடும், விமான நிலையத்துக்கு செல்ல புதிதாக அமைக்கப்படும், 200 அடி ரோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என உறுதி அளித்திருந்தார். அதனால், எஞ்சியுள்ள எங்கள் நிலத்துக்கு செல்ல எந்த தடையும் இருக்காது என நம்பினோம். அதனால், நிலங்களை கொடுத்தோம். தொடர்ந்து, அரசு அதிகாரிகளை பலமுறை சந்தித்து, 60 மீ., ரோட்டில், இருபுறமும் தலா 10 மீ., சர்வீஸ் ரோடு விட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தோம்.

இந்நிலையில், விமான நிலைய ஆணையம், சர்வீஸ் ரோட்டுக்கு இடம் விடாமலும், முறையாக அளவீடு செய்யாமலும் சுற்றுச்சுவர் கட்டும் பணியை துவக்கியுள்ளது. சுற்றுச்சுவர் கட்டினால், மீதியுள்ள எங்கள் நிலத்துக்கு செல்ல வழியே இல்லை.

விரிவாக்க பணிக்கு இடம் கொடுத்த எங்களுக்கு, சர்வீஸ் ரோடு வேண்டும் என கேட்கிறோம். ஆனால், இதுவரை விமான நிலைய ஆணையமோ, மாவட்ட நிர்வாகமோ எந்த பதிலையும் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். சர்வீஸ் ரோடு தராவிட்டால் எந்த பணியையும் நடக்க விடமாட்டோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement