மோடிக்கு மசாலா பொரி கொடுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்; திரிணமுல் கட்சியினர் அட்டூழியம்

11


நமது நிருபர்

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கிய வியாபாரி விக்ரம் சாவ், தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற பிரதமர் மோடி, ஜார்கம் பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் மசாலா பொரி வாங்கி சாப்பிட்டார். அந்த போட்டோ, வீடியோ ஆகியவை இணையத்தில் வைரல் ஆகின.
இதைப் பார்த்து அப்போது ஆட்சியில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து, சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். குண்டு வீசி அழித்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வியாபாரி கூறியதாவது: எனக்கு கொலை மிரட்டல் விடுத்து அழைப்பு வந்தது. தினமும் மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. குண்டு வீசி கடையை அழித்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். இது பற்றி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளேன். தற்போது எனக்கு போலீசார் தரப்பில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் கூறியதாவது:
நாட்டில் பதற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட இதுபோன்ற முயற்சிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சில தனிநபர்கள் இதுபோன்ற செயல்கள் மூலம் அமைதியைக் குலைக்க முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து இந்தியாவில் பதற்றத்தை உருவாக்குகிறார்கள்.

அந்த காலம் இப்போது கடந்துவிட்டது. இப்போது இருப்பது நமது அரசு. எல்லாவற்றிற்கும் நல்ல முறையில் பதிலளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கொலை மிரட்டலை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் விடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement