ஸ்டாலினுக்கு விடாமல் முட்டுக் கொடுக்கும் திருமா

32

சென்னை: பதவி ஆசை காரணமாக அமைச்சரவையில் விசிக இணையவில்லை; தமிழக அரசியல் நெருக்கடி காரணமாக இம்முடிவை எடுத்தோம் என்பதை ஸ்டாலின் அறிவார் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: கடந்த காலங்களில் நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றோம். திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் தேர்தலுக்கு முன்பாக நான் மேற்கொண்டேன். என்னை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பார்த்தார்கள். நான் ஒருபோதும் இடம் தர மாட்டேன் என்று செயல்படுத்தி காட்டினேன். இதில் யாரும் மாற்றுக்கருத்து சொல்ல முடியாது. எதிர் கருத்தை சொல்ல முடியாது.

இரண்டு ஆண்டுகளாக என்னை குறிவைத்து, சமூக ஊடகங்களில் விவாதித்தார்கள். என்னை குறி வைத்து ஜாதிய மதவாத சக்திகள் காய்களை நகரத்தினார்கள், என்னுடைய உணர்ச்சிகளை தூண்டினார்கள். திட்டமிட்டு அவதூறுகளை பரப்பினார்கள். ஆத்திரம் மூட்டினார்கள் எதற்கும் நாங்கள் மசியவில்லை. திமுக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்றும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக தலைவருக்கு என்னால் எவ்வளவு உறுதுணையாக இருக்க முடியுமோ அவ்வளவு நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன். தேர்தல் முடிவுக்கு பிறகு திமுக கூட்டணியை காப்பாற்றும் அளவுக்கான வலிமை என்னிடம் இல்லை.

காங்கிரஸ் எடுத்த முடிவுகளை தடுக்கும் வலிமை என்னிடம் இல்லை. கம்யூனிஸ்டுகளின் முடிவுகளை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. அதேபோல் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் நிலைப்பாட்டிற்குள் என்னால் தலையீடு செய்ய முடியாது. ஆனால் சமூக வலைதளங்களில் என்னை மட்டும் குறிவைத்து அவதூறு கணை ஏவுவது என் என்று தெரியவில்லை.

நானே அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து வந்தபோது நான் அதற்கு இணங்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதிபடுத்தப்பட்டபோது வன்னி அரசை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து மேற்கொண்டு கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை. தேர்தல் நேரத்தில்தான் யாருடன் பயணிப்பது, கூட்டணி என்பது குறித்த முடிவுகளை எடுப்பது வழக்கம்.

அமைச்சரவையில் இடம்பெற விசிக எடுத்த முடிவுக்கு பதவி ஆசை காரணம் இல்லை. எங்களுக்கும் திமுகவுக்கு கொள்கை புரிதல் உள்ளது. தற்போது நிலவும் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்தோம் என்பதை ஸ்டாலின் அறிவார். எங்கள் நேர்மை, அரசியல் தூய்மையை களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை; அவசரப்படாமல் எங்கள் கட்சியின் வரையறை அடிப்படையில் முடிவு எடுத்தோம்.

நான் சர்வாதிகாரி இல்லை; ஜனநாயகவாதி; திமுக கூட்டணிக்கு நாங்கள் உறுதியுடன் இருந்ததை போகிற போக்கில் விமர்சிக்கக்கூடாது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற எங்கள் முழக்கத்தை தான் கட்சியினர் வலியுறுத்தினர். காங்., இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகிச் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. தேர்தலுக்கு பிறகு தி.மு.க கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நான் என்ன கூட்டணி தலைவரா? இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement