வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணம்; உலக நாடுகளும் இணைய விரும்புவதாக மோடி பெருமிதம்

3

புதுடில்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மேற்கொள்ளப்படும் பயணத்தில் உலகமே பங்கேற்க விரும்புகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடில்லியில் 19வது ரோஜ்கார் மேளாவில், பல்வேறு அரசுத் துறைகளில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 ஆயிரம் பேருக்கு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இன்று நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான நாள்.

இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து உலகம் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உலகம் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவதில் இந்திய இளைஞர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். வரும் ஆண்டுகளில், வளர்ந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் அனைவரும் ஒரு முக்கியப் பங்கை ஆற்றப் போகிறீர்கள்.

இந்தச் சாதனைக்காக, உங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன். ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பல துறைகளில் இளைஞர்கள் அனைவரும் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர். இன்று, பணியமர்த்தப்பட்ட இளைஞர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்காளர்களாக மாறி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட தனது பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் இந்தியாவின் இளைஞர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், ஒளிமயமான மற்றும் திறமையான இந்தியாவிற்கான உத்தரவாதத்துடன் வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement