நம்ம பள்ளி.. நம்ம வாத்தியார்.. சாதனை படைக்கும் கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கற்பித்தலில் கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கொத்தட்டையில் நல்லுார் வட்டார அளவில் அதிக பரப்பளவு கொண்ட பள்ளியாக இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

இங்கு, தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி கடந்த, 1964ல் தொடக்கப் பள்ளியாக துவங்கப்பட்டு, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 

பின்னர், 1973ல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாகவும், அருணா சர்க்கரை ஆலை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அதே ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2009ல் இப்பள்ளி மீண்டும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 

ஆசிரியர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. தற்போது, பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர்.

தனியார் பளளிக்கு இணையாக (கணினி ஆய்வகம்) ைஹடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் போர்டு வசதிகளுடன் மாணவர்களுக்கு நவீன காலத்திற்கேற்ப அனைத்து வசதிகளுடன் சுகாதாரமான குடிநீர், காற்றோட்டமான வகுப்பறையுடன் செயல்படுகிறது. 

மேலும் இப்பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், ஓவியம், விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் குறுவட்டம், மாவட்ட அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

தேசிய திறனாய்வு தேர்வில் இப்பள்ளியில் பயிலும் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுத வைத்து, தயார் படுத்தி வருகின்றனர். சிறந்த கல்வி வழங்குவதால் மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 



தரமான கல்வி வழங்குவதே லட்சியம் 

நான் இப்பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தேன். பள்ளியில் போதிய கட்டமைப்புகள் இல்லை. இதனால் மாணவர்கள் படிக்க சிரமம் அடைந்தனர். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை இல்லை. மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உதவியுடன் தற்போது அனைத்து வசதிகளுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது.

பள்ளி வளர்ச்சியும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதும் ஆசிரியர்களாகிய எங்களின் லட்சியம். கிராமப்புற மாணவர்களுக்கு  தனியார் பளகளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலில் சிறந்த அடித்தளமாக கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி விளங்கி வருகிறது.

அனைத்து மாணவர்களும், 4ம் வகுப்பு முதல், 16 வாய்ப்பாடுகளை 15 நிமிடங்களுக்குள் எழுதவும், ஒப்புக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் 1ம் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்பித்தலில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும், கணினி பயிற்சி அளிக்கப்பட்டு மாணவர்கள் தானாக இயக்கும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

– செல்வன்,

பொறுப்பு தலைமை ஆசிரியர்.



மாணவர்கள் சிறந்த நிலையை அடைய வேண்டும்

நான் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். கடந்த மாதம் பணி நிறைவு பெற்றேன்.

மாணவர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் கல்வித்திறனை மேம்படுத்தினேன். அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவர்களுக்கு பெற்று தந்தேன்.

மாணவர்கள் சிறந்த முறையில் படித்து சிறந்த நிலையை அடைய வேண்டும் என பாடுபட்டேன். நான் பல்வேறு பள்ளிகளில் பணி புரிந்தாலும் கொத்தட்டை பள்ளியில் பணி நிறைவு செய்ததை பெருமையாக கருதுகிறேன். மேலும், இப்பள்ளி மென்மேலும் வளர்ச்சியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 

– சுப்பிரமணியன்,

முன்னாள் தலைமை ஆசிரியர்.



மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்  நான் இப்பள்ளியில் கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் படித்தேன். எனக்கு தொடக்கக்கல்வியை, இப்பள்ளி சிறப்பாக வழங்கியது.

தொடக்க கல்வியில் நன்கு படித்ததால் திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அடுத்த அமராவதி ‘சைனிக்’ பள்ளியில் நடந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று, என் உயர்கல்விக்கு சிறந்த அடித்தளமாக விளங்கியது. இங்கு படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து கல்வியில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

– சீனி பழமலை,

முன்னாள் மாணவர். 

இப்பள்ளியில் பணிபுரிவது பெருமை இப்பள்ளியில் தொடக்க கல்வி வகுப்பு படித்து, தற்போது தற்காலிக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன்.

என் உயர்கல்விக்கு இப்பள்ளி அடித்தளமிட்டது. என் போன்று மாணவர்கள் உயர்கல்வி பெற்று வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும். நான் படித்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவது பெருமையாக உள்ளது.

–துர்காதேவி,

முன்னாள் மாணவி.



தனியார் பள்ளிக்கு நிகராக ஆங்கில கல்வி நான் இப்பள்ளியில் கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன் மழலையர் வகுப்பு ஆசிரியராக சேர்ந்து பணிபுரிந்து வருகிறேன்.

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை சிறந்த முறையில் கையாள கற்று தருகிறோம். இப்பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது. இதனால் மழலையர் வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

– ஆனந்தராஜ்,

ஆசிரியர் 



மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்

நான் இப்பள்ளியில் கடந்த, 8 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். கிராமப்புற மாணவர்களின் கல்வித்திறனை ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தி வருகிறோம்.

விளையாட்டு, குறுவட்டம் அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை பெற்று வருகின்றனர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி, உயர் நிலையை பெற நாங்கள் அடித்தளமாக இருந்து வருகிறோம். ஸ்மார்ட் போர்டு மற்றும் பல நவீன தொழில்நுட்பங்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருவதால் மாணவர்கள் நவீன கால கல்விக்கு ஏற்றவாறு படித்து வருகின்றனர்.

–லட்சுமி,

இடைநிலை ஆசிரியர்.



மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்துகிறோம் அரசு பள்ளி நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நல்லமுறையில் மாற்றும் பள்ளி என்பதற்கு ஏற்ப நமது நல்லுார் ஒன்றியத்தில், 62 ஆண்டுகளாக, இப்பள்ளி இயங்கி வருகிறது.

நமது பள்ளியில் விசாலமான வகுப்பறைகள், விளையாடும் இடம், குடிநீர், கழிவறை வசதி உள்ளது. மாணவர்கள் மீது, கற்றலிலும் மற்ற இணை செயல்பாடுகளிலும் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்துகின்றனர்.

திறமைக்கேற்ப கற்றல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

யோகா, விளையாட்டு பயிற்சிகள், கலைத்திருவிழா நிகழ்ச்சிகள், எழுத்துப் பயிற்சி, தமிழ், ஆங்கில மொழி பயிற்சி என, மாணவர்களை அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தி வருகிறோம். 

– பவுசியா பேகம்,

இடைநிலை ஆசிரியர். 

 

Advertisement