நிரம்பிய கழிப்பறை கழிவுநீரால் அரசு மருத்துவமனையில் அவதி

திருப்புத்துார்:திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் கழிப்பறை கழிவுநீர் தொட்டி நிரம்பியதால் வீசும் துர்நாற்றத்தால் நோயாளிகள்,மருத்துவமனை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசு மருத்துவமனையில் ஆண்கள்,பெண்கள், அவசர சிகிச்சை,மகப்பேறு வார்டுகளுக்கு தனி,தனியாக கழிப்பறை கழிவுநீர் தொட்டிகள் உள்ளன. 30 நாட்களில் தொட்டிகள் நிரம்பி விடுவதால் பல முறை கழிவுநீரை அகற்ற வேண்டியுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு கோரும் பணியும் மருத்துவமனை பணியாளர்களுக்கு சுமையாகி விட்டது. இந்நிலையில், பெண்கள் வார்டிற்கான கழிவுநீர் தொட்டி நிரம்பி சில நாட்களாகி விட்டன. அதை அகற்ற வழக்கமாக வரும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் கழிவுநீரை வெளியேற்ற இடம் ஒதுக்கக் கோரி வேலை நிறுத்தத்தில் உள்ளனர். இதனால் கழிவுநீரை அகற்ற முடியாமல் மருத்துவமனை பணியாளர்கள் தவிக்கின்றனர்.

மருத்துவமனையில் துர்நாற்றம் வீசத்துவங்கியுள்ளது.

பேரூராட்சியிடம் மருத்துவமனை பணியாளர்கள் கழிவுநீர் அகற்ற கோரியுள்ளனர். பேரூராட்சியிடமும் அதற்கான வாகனம் இல்லை. இதற்கு நிரந்தர தீர்வாக அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறை கழிவுநீர் தொட்டிகளை இணைக்கவோ, அல்லது ரோடு அருகே விரிவான பெரிய தொட்டி அமைக்க மருத்துவமனையினர் கோரியுள்ளனர். பலமுறை கோரியும் பொ. ப. து( கட்டிடம்) நடவடிக்கை எடுக்கவில்லை. கழிப்பறை தொட்டிகளை விரிவுபடுத்தி இணைப்பதன் மூலம் 3 மாதத்திற்கு ஒரு முறை கழிவுநீரை அகற்றலாம்.

Advertisement