பாலிசி மாற்றுவதில் சேவை குறைபாடு: 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு

கோவை: மருத்துவ காப்பீடு பாலிசியை வேறு நிறுவனத்திற்கு மாற்றி தராமல் இழுக்கடித்ததாக கூறி நுகர்வோர் கோர்ட்டை அணுகியவருக்கு, உரிய நிறுவனம், ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இருகூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவர் தனக்கும், தன் தாய்க்கும், பாலிசி பஜார் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், பாலிசி எடுத்துள்ளார். அதை புதுப்பித்து, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு மாற்ற முயற்சித்துள்ளார்.

இதற்காக, பாலிசி காலம் முடிவடைவதற்கு 50 நாட்களுக்கு முன்பே, 2025 அக்டோபர் 7ம் தேதி, 12 ஆயிரத்து 83 ரூபாய் செலுத்தியுள்ளார். ஹரியின் பாலிசி புதுப்பிக்கப்படவில்லை. அவரின் அம்மா பாலிசி மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தன் பாலிசியை புதுப்பிக்குமாறு பலமுறை அணுகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலக்கெடு முடிவடைந்ததால், அதை புதிய நிறுவனத்திற்கும் மாற்ற முடியாமல், பழைய நிறுவனத்திலே தொடரவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பலமுறை பாலிசிபஜார் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது உரிய பதில் இல்லை.

அதிருப்தியடைந்த புகார்தாரர், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த நீதிபதி தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், ' புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ. 5 ஆயிரம், புகார் செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரம் சேர்த்து, ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement