கேரளாவுக்கு கனிமவள லாரிகளை அனுப்புங்க கலெக்டரிடம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கலாட்டா

நாகர்கோவில்: 'குமரி மாவட்டம் வழியாக கேரளம் செல்லும் கனிமவள லாரிகளை, தாமதமின்றி அனுப்ப வேண்டும்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக, ஆயிரக்கணக்கான லாரிகளில், கனிமவளங்கள் கேரளாவுக்கு தினமும் கொண்டு செல்லப்படுகின்றன. இதை தடுக்கும்படி, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தும், கடந்த தி.மு.க., ஆட்சியில் கண்டுகொள்ளப்படவில்லை.

கனிமவள லாரிகளால், மனித உயிர்கள் பறிபோதால், கன்னியாகுமரி மாவட்டம் வழியாக, அந்த லாரிகள் செல்வதற்கு, குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா தடை விதித்தார்.

அது, சட்டசபை தேர்தல் நேரம் என்பதால், கலெக்டர் உத்தரவை மீற முடியாமல் தவித்த கனிமவள லாரி உரிமையாளர்கள், அதன்பின், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர்.

இதனால், மீண்டும் கனிமவள லாரிகளின் பயணம் தொடங்கி உள்ளது. மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி, களியக்காவிளையில் தீவிர சோதனைக்கு பின், லாரிகள் அனுப்பப்படுகின்றன. இதனால், நாள் கணக்கில் லாரிகள் காத்துக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், வெகுண்டெழுந்த தி.மு.க., 'மாஜி' அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆஸ்டினுடன் சென்று, கலெக்டர் அழகு மீனாவை சந்தித்து, 'லாரிகளை பரிசோதனை முடித்து, உடனடியாக அனுப்ப வேண்டும். எடை சரிபார்ப்பு மையம் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும்' என, வலியுறுத்தினார். கலெக்டரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அனிதா ராதாகிருஷ் ணன் கூறுகையில், ''கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகள், சோதனை என்ற பெயரில் நாள் கணக்கில் நிறுத்தப்படுவதால், கட்டட தொழில் பாதிக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement