முகநுால் மூலம் அறிமுகமான பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

பெங்களூரு: முகநுால் மூலம் அறிமுகமான இளம் பெண்ணை கொலை செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, பெங்களூரு நகர ஊரக முதன்மை மாவட்டம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

ஆடுகோடி விஜயலட்சுமி காலனியில் உள்ள, 'மகாவீர் கிங்க்ஸ் பிளேஸ்' அடுக்கு மாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் வசித்து வந்தவர்கள் பெண்களான குஸ்மா ராணி, வினு சர்மா.

முகநுால் மூலம் குஸ்மாவுக்கு, சுக்பீர் சிங் என்பவர் அறிமுகமானார்.

இருவரும் நண்பர்களானதால், மொபைல் எண்களை பரிமாறி கொண்டனர். கடந்த 2016 ஜன., 19 ம் தேதியன்று மதியம் 12:30 மணிக்கு குஸ்மாவை சந்திக்க சுக்பீர் சிங் வந்தார். மதியம் 3:00 மணி வரை அங்கு தங்கியிருந்தார்.

பணி முடிந்து இரவு 8:00 மணிக்கு குஸ்மாவின் அறை தோழி, வினு சர்மா வந்தார். வீட்டின் கதவு திறந்திருந்தது. தரையில் ரத்தக்கறை படிந்த பாத தடங்களை பார்த்தார். பதற்றத்துடன் வீட்டினுள் சென்று பார்த்த போது, குஸ்மா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக அண்டை வீட்டினருக்கு தெரிவித்தார். இது தொடர்பாக ஆடுகோடி போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, சுக்பீர் சிங் வந்து சென்றது தெரியவந்தது.

அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, பணத்துக்காக குஸ்மாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். இது தொடர்பான விசாரணை, பெங்களூரு ஊரக முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சுக்பீர் சிங் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில் சுக்பீர் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ரேகா உத்தரவிட்டார்.

Advertisement