அரவக்குறிச்சி பகுதியில் கரும்பு ஜூஸ் விற்பனை ஜோர்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், வெயில் வெளுத்து வாங்குவதால் கரும்பு ஜூஸ் விற்பனை களைகட்டி உள்ளது.

கரூர் மாவட்டத்தில், ஆண்டுதோறும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக அரவக்குறிச்சி, க.பரமத்தி, தென்னிலை பகுதிகளில் வெப்பம் வழக்கத்தை விட முன்கூட்டியே அதிகரித்து காணப்படும். பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பழங்கள், இளநீர், குளிர்பானங்கள் மற்றும் ஜூஸ்களை அருந்தி வருகின்றனர். குறிப்பாக சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு ஜூஸ் விற்பனை வரவேற்பை பெற்றுள்ளது.

இயற்கை சத்து நிறைந்த கரும்பு ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் எலுமிச்சை, இஞ்சி போன்றவை கலந்து வழங்கப்படுவதால், வெப்பத்தை தணிக்கும் சிறந்த பானமாக மக்கள் விரும்பி அருந்துகின்றனர். இது உடலுக்கு உடனடி உற்சாகம் தருவ தோடு, நீரிழப்பை தடுக்கும் பானமாகவும் கருதப்படுகிறது. வெப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரவக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு ஜூஸ் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
ஒரு பெரிய டம்ளர் கரும்பு ஜூஸ், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இயற்கை பானமான கரும்பு ஜூஸ் மக்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது.

Advertisement