3 மகன்களுடன் மாயமான தாய் போலீசார் விசாரணை 

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே காணாமல் போன மனைவி மற்றும் மூன்று மகன்களை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தாலுகா, கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பிரியா, 28; இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து மகன்களுடன் புறப்பட்டு சென்ற பிரியா, நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அச்சமடைந்த வெங்கடேசன் பல்வேறு இடங்களில் மனைவி, மகன்களை தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மனைவி பிரியா மற்றும் மூன்று மகன்களையும் கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement