பலமுனை தாக்குதல்; சிக்கலான பாதையில் நாடு! இது, மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

2

ஆடிட்டர்
ஜி.கார்த்திகேயன்


வாட்ஸ் அப்-9842210422

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, இந்தியா உட்பட உலக நாடுகளில் பெட்ரொல், டீசல், எரி வாயு தட்டுப்பாடு, அன்னிய செலாவணி கையிருப்பு குறைவு, தங்கம் விலை ஏற்றம் ஆகிய செய்திகள் கடந்த சில மாதங்களாக தினமும் கேட்கும் ஒன்று. எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுமக்கள் தங்கம் வாங்குவதை ஒத்தி வையுங்கள், பொது போக்குவரத்தை பயன் படுத் துங்கள், வெளிநாட்டு சுற்றுலாவை தவிருங்கள் என மக்களிடம் சிக்கனத்தை, பிரதமரே வலியுறுத்துகிறார் என்றால், அது சாதாரண செய்தி அல்ல; எச்சரிக்கை மணி.

அன்னிய செலாவணி குறைவது ஏன்?

சுருக்கமாக சொன்னால், ஏற்றுமதியை விட இறக்குமதி கூடும் போது இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறையும். இது தவிர, வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிக்காதது, வெளிநாடு வாழ் இந்தியர் அனுப்பும் பணம் குறைவது, பங்கு சந்தையில் அன்னிய முதலீட்டை திருப்பி எடுப்பது போன்ற காரணிகளால். அன்னிய செலாவணி கையிருப்பு குறையும்.
இதனால் டாலருக்கான தேவை அதிகரிக்கும்; டாலர் விலை கூடும்.

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு பிப்., மாதம் 720 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த மூன்று மாதங்களில் 690 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால், ஈரான், சவுதி உட்பட நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளது. ஈரானின் 'ஹோர்முஸ் நீரிணை' போக்குவரத்து சிக்கல்களால், உலக நாடுகளின் எண்ணெய் கையிருப்பு குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 60 டாலராக இருந்தது தற்போது 110 டாலராக உயர்ந்துள்ளது. பலமுறை சர்வதேச எண்ணெய் விலை மாற்றம் கண்டபோதும், கடந்த நான்கு ஆண்டுகளாக, சுமார் 49 மாதங்களாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளும் உயர்த்தப்படாமல் இருந்தது. பெட்ரோல் விலை மற்ற நாடுகளில் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, வியட்நாமில் 47 சதவீதம்; கனடாவில் 32 சதவீதம்; சீனாவில் 28 சதவீதம்; பாகிஸ்தானில் 51%, அமெரிக்காவில் 31% அளவில் அதிகரித்துள்ளது.

ஈரான் -அமெரிக்கா போர் பதட்டத்துக்குப்பிறகு எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு, சர்வதேச விலை உயர்வால் பல மாதங்களாக நஷ்டத்தை தாங்கி வந்த நமது பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த வாரத்தில் இரு முறை அதிகரித்தும் இது 4 சதவீத அளவில்தான் உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படும். டீசல் விலை அதிகரிக்கும் போது போக்குவரத்து செலவு உட்பட்ட அனைத்து விலைகளும் உயர்ந்து, நிச்சயம் அது பண வீக்கத்தை ஏற்படுத்தும்.

விலை உயர்வின் சுமை 100 சதவீதம் மக்கள் மீது சுமத்தப்படாமல் தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதே சாமானியனின் கேள்வி. இலங்கையில் புதன்கிழமை விடுமுறை நாள். நான்கு நாள் வேலை முறை. வியட்நாம், மக்களை சைக்கிளில் செல்ல, 'கார்-பூலிங்' செய்ய, பொதுப் போக்குவரத்து பயன்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது.

நமது நாட்டிற்கான கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம். அதற்கு அந்நிய செலாவணி அதிகம் தேவையாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 89 லிருந்து ரூ. 96 ஆக குறுகிய காலத்தில் குறைந்துள்ளது. ஒரு புறம் கச்சா எண்ணெய் உயர்வு மறுபுறம் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என இரட்டிப்பு சவாலாக மாறியுள்ளது.

உலக அளவில் இந்தியாவில்தான் தங்கம், கலாச்சார ரீதியாகவும், முதலீடு ரீதியாகவும் அதிக அளவு பயன் படுத்தப்படுகிறது. 'கடகட' என கடந்த இரு ஆண்டுகளில் விலை உயர்ந்த தங்கத்தில், பொது மக்கள் ஆபரணமாக வாங்குவதை விட முதலீடாக வாங்க ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் ஆண்டு தேவையில் 90 சதவீதம்- கிட்டத்தட்ட 750 டன் அளவில் இறக்குமதி செய்யப்பட்டு அதற்கு அன்னிய செலாவணி விரயமாகிறது. இந்தியாவில் வீடுகள், கோவில்கள், அரசு சொத்து எல்லாம் சேர்த்து மொத்தம் சுமார் 40,000 டன் அளவில் தங்கம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தங்கம் இறக்குமதிக்கான அன்னிய செலாவணி செலவு 2023ம் ஆண்டு, 35 பில்லியனிலிருந்து 2026ம் ஆண்டில் 72 பில்லியன் டாலராக அச்சமூட்டும் அளவில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் வாங்குவது தவிர்க்க முடியாது. ஆகவே பொது மக்கள் தங்கம் வாங்குவதை தவிருங்கள் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே அந்நிய செலாவணியால் அவதிப்பட்ட போது தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு, 1967 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 2011ல் டாக்டர் சி. ரங்கராஜன், 2013ல் ப. சிதம்பரம் பொது மக்களிடம் தற்போது போல் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டாலருக்கு எதிராக நமது ரூபாய் பலவீனமடைந்ததால் உலகின், 4வது பெரிய பொருளாதாரத்தில் இருந்த இந்தியா 6வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஜப்பான், இங்கிலாந்து இரண்டும் மீண்டும் நம்மை முந்திவிட்டன: தற்போது ஜப்பான் பொருளாதாரம், 4.38 டிரில்லியன் டாலர்; இங்கிலாந்து - 4.26 டிரில்லியன் டாலர்; இந்தியா - 4.15டிரில்லியன் டாலர் என்கிற நிலை.

எரிபொருள் வினியோக சங்கிலியில் பாதிப்பு, தங்கம் விலையில் நிச்சயமின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதியில் தொய்வு, இறக்குமதி அதிகரிப்பு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு என்று நமது நாட்டில், ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதல் நடப்பதால், ஒரு சிக்கலான பாதையில் நாடு பயணிப்பது இப்போது பாமரனுக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது.

குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர், நடுத்தர வர்க்கத்தினர், தீர்வு தெரியாத, குழப்பமான எதிர்காலத்தை எதிர்நோக்கிஉள்ளனர். போர் நீடித்தால், மூலப்பொருட்கள் மற்றும் அனைத்து செலவுகளும் அதிகரித்து பணவீக்கத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டு பயணங்களைத்தவிர்த்தல், டாலர் சம்பந்தமான செலவு மற்றும் முதலீடை ஒத்தி வைத்தல், உள்நாட்டு சிக்கன நடவடிக்கைகளை பொது மக்கள் கடை பிடித்தல் இதெல்லாம் நிலைமை சரியாகும் வரை கொஞ்ச காலம்தான். பொது முடக்கத்தை நோக்கி நமது நாடு செல்ல வாய்ப்பில்லை.

இந்திய நிறுவனங்கள் நன்றாக இருப்பதால் 'SIP'கள், நீண்டகால பங்குகளில் செய்யும் முதலீட்டை தொந்தரவு செய்யத் தேவையில்லை; ஆகவே,முதலீட்டில் பதட்டம் வேண்டாம்.
மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமே தவிர, கலக்கம் கொள்ள வேண்டிய நேரம் அல்ல. உலகைச்சுற்றிலும் போர் மேகங்கள் உண்மை. ஆனால் இந்தியாவின் வலிமையும் உண்மை. ஒவ்வொருவரும் இந்த அதிர்ச்சியின் ஒரு சிறு பகுதியை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டால், மீதியை நாடு சுமக்கும்.

Advertisement