சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர சுவாமிகள் நேபாளத்தில் யாத்திரை

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், நேபாளத்தில் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டுள்ளார்.நேற்று முன்தினம், நேபாள தலைநகர் காத்மண்டு வருகை தந்த அவருக்கு, அந்நாட்டு அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துாளி பாத பூஜை செய்யப்பட்டது.

காத்மண்டுவில் உள்ள ஸ்ரீபசுபதிநாதர் கோவிலுக்கு, நேற்று விஜயம் செய்த ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் சார்பில் வழங்கப்பட்ட அபிஷேக பொருட்கள் நிரம்பிய வெள்ளி பாத்திரங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் சார்பில், சிவ அஷ்டோத்ரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள், பெரிய பதக்கம் இணைக்கப்பட்ட, மூன்று அடி தங்க மாலை, பட்டு வஸ்திரம் ஆகியவை, ஸ்ரீபசுபதி நாதருக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

Tamil News
கோவில் சார்பில் சிறப்பு மரியாதையாக, ஸ்ரீபசுபதி நாதர் உருவம் அமைந்த, ஒரு அடி உயர ஸ்படிக லிங்கம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காத்மண்டுவில் உள்ள ஸ்ரீராமர் கோவில், முத்த நீலகண்ட சுவாமி கோவில், கால பைரவர் கோவில் ஆகியவற்றிலும், ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் வழிபாடு செய்தார். பின், காத்மண்டுவில் குழந்தைகள் மருத்துவனையை திறந்து வைத்தார்.

வரும் 30ம் தேதி வரை, நேபாளத்தில் தங்கியிருக்கும் சுவாமிகள், பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்ய இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாக, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் தெரிவித்துள்ளது.

Advertisement