தாய், மகன் இருவரும் பிரிட்டனில் மேயர்; ஹரியானா மாநிலத்துக்கு பெருமை

நமது சிறப்பு நிருபர்


ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தாயும் மகனும் பிரிட்டன் நாட்டு நகரில் மேயர் பதவிக்கு உயர்ந்துள்ளனர்.

துஷார் குமார் என்பவர் ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஆவார். இவர் பிரிட்டனின் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகரின் மேயராகப் பதவியேற்று, பிரிட்டன் வரலாற்றில் மிக இளம் வயதான இந்திய வம்சாவளி மேயர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.இவர் 20 வயதில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 23 வயதில் மேயர் ஆனார்.

இவரது குடும்பம் ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் வசித்து வந்தது.இவரது தாயார் பர்வீன் ராணியும் ஹர்ட்ஸ்மியர் பரோ கவுன்சிலின் கவுன்சிலராகவும், துணை மேயராகவும் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு பர்வீன் ராணி தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். அப்போது துஷாருக்கு 10 வயது, அவரது இளைய மகன் பிரியான்ஷுவுக்கு 7 வயது.

தொழிலாளர் கட்சியை நாடி, உள்ளூர் சமூகப் பணிகளில் தங்கள் அரசியல் பதவி பெற்ற முதல் தலைமுறை குடியேறிகளான பர்வீன் ராணி மற்றும் அவரது மகன் துஷார் குமாரின் வெற்றிகள் ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் ஒரு சாதாரண இரண்டு மாடி வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இது குறித்து பர்வீன் ராணி கூறியதாவது: பெண்கள் சரியாக நடத்தப்படாத ஒரு மாநிலத்திலிருந்து நான் வருகிறேன் என்று மக்கள் என்னிடம் சொல்லும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களைப் பாருங்கள்.

அவர்களில் பலர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்தான். பிரிட்டனில் நான் செய்யும் பணிகளின் மூலம், என் சொந்த ஊரில் உள்ள பெண்களுக்கு நானும் ஒரு உத்வேகமாக இருக்க விரும்புகிறேன். அவர்கள் விரும்பும் எதையும் அவர்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை நான் அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன்," என்றார்.

யார் இந்த துஷார் குமார்?



20 வயதில் தொழிலாளர் கட்சியின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட துஷார் குமார், கடந்த 2023ம் ஆண்டு எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹம்வுட் நகர சபையில் சேர்ந்தார். துணை மேயராகப் பணியாற்றியுள்ளார்.

கவுன்சிலராக தேர்வு செய்யப்படும் போது, லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் துறையில் 2ம் ஆண்டு இளங்கலை படித்துக் கொண்டிருந்தார். அதன்பிறகு, கவுன்சிலர் பதவியிலிருந்து துணை மேயராகவும், தற்போது நகர சபையின் மிக உயரிய மேயர் பதவிக்கும் அவர் உயர்ந்துள்ளார்.

Advertisement