தற்கொலை செய்ய பீச்சுக்கு வந்த பெண் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைப்பு

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை மீட்ட போலீசார், அறிவுரை கூறி குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், நேற்றுமுன்தினம் இரவு எஸ்.பி.,ஜெயக்குமார் பாதுகாப்பு பணியை கண்காணிக்க சென்றார். அப்போது சிறுமி ஒருவர் தனியாக ஸ்கூட்டியுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்ததில், தனது தாய் தன்னை பீச்சுக்கு கூட்டி வந்ததாகவும், மொபைல் போன் மற்றும் ஸ்கூட்டர் சாவியை கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன் என கூறிச்சென்றவர் இன்னும் வரவில்லை என கூறி அழுதுள்ளார்.

சந்தேகமடைந்த எஸ்.பி., கடற்கரை பகுதியில் தேட போலீசாரை அனுப்பினர். அப்போது, பீச்சில் இருட்டான பகுதியில் நின்றிருந்த பெண்ணை போலீசார் எஸ்.பி., யிடம் அழைத்துவந்தனர். விசாரித்ததில் அவர் கடலுார் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் வந்தது தெரிந்தது. அந்த பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டார். தொடர்ந்து இவருக்கும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Advertisement