ஏ.ஐ., வரவால் தமிழிலேயே ஏற்றுமதி செய்யலாம்: சேதுராமன் சாத்தப்பன் தகவல்

மதுரை: ''ஏ.ஐ., வரவால் தமிழிலேயே ஏற்றுமதி செய்யலாம்'' என மதுரையில் நடந்த ஏற்றுமதி, ஸ்டார்ட் அப் தொடர்பான கருத்தரங்கில் ஏற்றுமதி ஆலோசகர் சேதுராமன் சாத்தப்பன் பேசினார்.

தியாகராஜர் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் ஏற்றுமதியின் அடிப்படை, தவறில்லாமல் ஏற்றுமதி செய்தல், ஏற்றுமதிக்கான மார்க்கெட்டிங், வெற்றிகரமான ஸ்டார்ட் அப் ஐடியாக்கள், அதற்கான முதலீடுகள் குறித்து சேதுராமன் சாத்தப்பன் விளக்கினார்.

அவர் பேசியதாவது: முதலாம் நுாற்றாண்டிலேயே மேற்கத்திய, தென் கிழக்காசிய நாடுகளில் வணிகம் செய்தவர்கள் தமிழர்கள். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுடன் நாட்டின் கவுரவமும் அடங்கியுள்ளது. எனவே நியாயமான லாபம், சரியான விலை, நல்ல சரக்குகள், நேரம் தவறாமையை ஏற்றுமதியாளர் கடைபிடிக்க வேண்டும்.

ஏ.ஐ., மொழி மாற்றிகளின் வரவால் தமிழிலேயே ஏற்றுமதி செய்யலாம். 2010ல் நாட்டின் ஏற்றுமதி 200 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2025ல் 960 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் 13.6 சதவீதத்துடன் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

மக்கள் தொகையில் 63 சதவீதத்திற்கும் மேல் இளைஞர்கள் உள்ளதால் ஆண்டுக்கு 5 முதல் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க, பிரதமர் மோடி தொடங்கிய திட்டம் ஸ்டார்ட் அப் இந்தியா. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான மூலதனம் கொண்ட 116 'யுனிகார்ன்' ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

அதிபன் குழுமத் தலைவர் செல்வா பழனியப்பன், மெம்பில் நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன், என்.ஆர்.கே., குழும நிறுவனர் மெய்யப்பன், ஸ்ரீ நாராயணி நிதி நிறுவன மூத்த ஆலோசகர் ஸ்ரீதரன் உட்பட ஏற்றுமதியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் பிளாட்டினம் டைட்டில் ஸ்பான்சர்கள் அதிபன் குழுமத்தின் டுடே கோல்டு நிறுவனம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. டைமண்ட் ஸ்பான்சர் சிட்டி யூனியன் வங்கி. கோல்டன் ஸ்பான்சர்கள் திருவாரூர் நாராயணி நிதி, மெம்பில் நிறுவனம். மீடியா ஸ்பான்சர் தினமலர். என்.ஆர்.கே., குழுமம், மதுரை ஸ்டார்ட் அப் ஆகியவை நிகழ்ச்சிக்கு உதவி புரிந்தன.

Advertisement