இடிந்து விழுந்த அங்கன்வாடி மையம்
மானாமதுரை:மானாமதுரை அருகேகால்பிரவு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததால் அருகில் உள்ள சமுதாயகூடத்தில் போதிய வசதி இல்லாமல் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கால்பிரவு ஊராட்சியில் கால்பிரவு கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஊராட்சி அலுவலகத்திற்கு அருகே செயல்பட்டு வருகிறது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இம்மையத்தின் கூரை இடிந்து விழுந்ததை தொடர்ந்து அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி மையம் வசதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது.மேலும் இக்கூடத்தில் திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் நடைபெறும் அன்று அங்கன்வாடி மையத்திற்கு விடுமுறை விடுவதாகவும் கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
கிராம மக்கள் கூறியதாவது:
அங்கன்வாடி மையத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பு மராமத்து செய்த நிலையில் 3 வருடங்களுக்கு முன்பு மையத்தில் பெரும்பாலான பகுதி இடிந்து விழுந்தன. மேலும் இங்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாத நிலையில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்திலும் போதிய வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருவதால் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கன்வாடி மையத்தின் மோசமான நிலையினால் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை மையத்திற்கு அனுப்பவும் அச்சப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.