அம்ருதவித்யாலயம் பள்ளிகளில் அயுத் அமைப்பு தேனீ-தாவர முன்முயற்சி
சென்னை: பள்ளிகளில் தேனீக்களுக்கு உகந்த தாவரங்களை நடும் இயக்கம் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அயுத் அமைப்பு கொண்டாடியது.
17 அம்ருதவித்யாலயம் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் தலைமையிலான தேனீ-தாவர முன்முயற்சி, உலக சுற்றுச்சூழல் தினத்தில் மகரந்தச்சேர்க்கையாளர்கள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, "நவ் பார் க்ளைமேட்" (Now for Climate) என்ற உலகளாவிய பிரசாரச் செய்திக்கு இணங்க, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 17 அம்ருதவித்யாலயம் பள்ளிகளில் தேனீ பாதுகாப்பு முன்முயற்சியை அயுத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் ஒருங்கிணைத்தன.
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் தங்கள் பள்ளி வளாகங்களுக்குள் உள்நாட்டுத் தேனீக்களுக்கு உகந்த தாவர இனங்களை நட்டனர். இந்த பசுமை முயற்சி ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பக்கத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் கே.ஜே.பிரவீன் குமார், ஈரோடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பி.மேகலா, நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் ரேஷ்மி என் நாயர் மற்றும் கன்னியாகுமரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் வி. ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்து மாணவர்கள் படிப்பதற்கான கற்றல் இடங்களை உருவாக்குவதோடு, உள்ளூர் மகரந்தச்சேர்க்கை உயிரினங்களின் எண்ணிக்கைக்கு ஆதரவளிப்பதையும் இந்த மரக்கன்று நடும் இயக்கம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நடப்பட்ட மரக்கன்றுகளில் வேம்பு, வாழை, புங்கம், புளி, முருங்கை, நாட்டு இலந்தை, மா மற்றும் நாவல் போன்ற பழம் தரும் இனங்கள் அடங்கும். கொன்றை, மகிழம், இலுப்பை, இலவம், கடம்பு, பூவரசு மற்றும் ஏழிலைப்பாலை போன்ற பூக்கும் இனங்களும், கனகாம்பரம், எருக்கன், அசெரோலா மற்றும் மஞ்சள் அலரி உள்ளிட்ட ஆண்டு முழுவதும் பூக்கும் வகைகளும் நடப்பட்டன.
இந்த இனங்கள் தேனீக்கள், உள்நாட்டு கொசுவாட்டித் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளுக்கு ஆதரவளிக்க உதவுவது மட்டுமல்லாமல் மண்ணின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
அயுத் என்பது அம்மா, ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவியால் ஈர்க்கப்பட்டு 40 நாடுகளில் செயல்பட்டு வரும் ஒரு இளைஞர் இயக்கமாகும். உலக சுற்றுச்சூழல் தினத் திட்டம், அயுத் தமிழகம் மற்றும் புதுவையில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தேனீ பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மே 20ம் தேதி, உலகத் தேனீ தினத்தில், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கருப்பொருளான “தேனீக்கள் ஒன்றாக மனிதர்களுக்காகவும் மற்றும் பூமிக்காகவும் - நம் அனைவரையும் தாங்கி நிற்கும் ஒரு கூட்டாண்மை.” என்பதன் அடிப்படையில் “பீ-காஸ்” (Bee-Cause) என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை இந்த அமைப்பு நடத்தியது.
இந்த இணையவழி கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநர் டாக்டர் வி.ஆர். ஸ்வாமிநாதன் மற்றும் ஹனிடே பீ பார்ம்ஸ் (HoneyDay Bee Farms) நிறுவனர் மற்றும் தி ஹைவ் டிரஸ்ட் (The Hive Trust) தலைவர் அபூர்வா பி.வி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைப்பாளர்களின் கூற்றுப்படி, இந்தியா முழுவதும் 32 நகரங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.
அயுத் தமிழகம் மற்றும் புதுச்சேரி, விழிப்புணர்வு பட்டறைகளையும் நடத்தியுள்ளதுடன், தமிழகத்தில் உள்ள அம்ருதவித்யாலயம் பள்ளிகளிலும், சென்னை மற்றும் நாகர்கோவிலில் உள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வளாகங்களிலும் தேனீ வளர்ப்புத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
"எங்கள் இளைஞர்கள் சுற்றுச்சூழல் பொறுப்பினை ஒரு தற்காலிக பிரசாரமாக பார்க்காமல், ஒரு நீண்ட கால கடமையாக ஏற்றுக்கொள்வதைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்." என்று அயுத் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருங்கிணைப்பாளர்களான பிரம்மச்சாரிணி குணாதீதாம்ருத சைதன்யா மற்றும் பிரம்மச்சாரிணி ஸ்வாதி ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும்
-
கொலுசு திருடிய டிரைவர் கைது
-
பருவமழையின் போது தடையற்ற மின் வினியோகம் அவசர கால பணிக்கு உபகரணங்கள் தயார்
-
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை திறக்க வலியுறுத்தி போராட்டம்
-
கணக்கெடுப்பில் விவரங்கள் துல்லியமாக பதிவு செய்ய அறிவுரை
-
வரத்து குறைவால் செவ்வந்திபூ விலை உயர்வு
-
விதிமீறி பிடித்தம் செய்த தொகையை வழங்க கோரிக்கை