தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில்கள்: கும்மிடியில் நின்று செல்ல பயணியர் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:வடமாநிலங்களில் இருந்து, தமிழக தென் மாவட்டங்களை இணைக்கும் விரைவு ரயில்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மாவட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய்கண்டிகை சிப்காட், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளுக்கும் மைய பகுதியாக கும்மிடிப்பூண்டி உள்ளது.

மேற்கண்ட தொழிற்சாலைகளில், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த, குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இதற்கு முன், கும்மிடிப்பூண்டியில் இருந்து எளிதாக கோயம்பேடு சென்று, அங்கிருந்து நேரடி பேருந்து பிடித்து சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர்.

தற்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதவரம் ஒரு பேருந்தும், மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல இரண்டாவது பேருந்தும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்றாவது பேருந்தும் பிடித்து, சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், பணம் மற்றும் நேர விரயம் ஏற்படுவதுடன், தங்களின் உடைமைகளை சுமந்தபடி, குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்வது என்பது, பெரும் சவாலாக இருப்பதாக பயணியர் புலம்புகின்றனர்.

ஆகவே, தென் மாவட்ட தொழிலாளர்கள் நலன் கருதி, வடமாநிலங்களில் இருந்து கும்மிடிப்பூண்டி, சென்னை மார்க்கமாக தென் மாவட்டங்களை இணைக்கும் விரைவு ரயில்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழி வகை செய்ய வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக, மேற்கு வங்கத்தில் இருந்து இயக்கப்படும் ஹவுரா - -திருச்சிராபள்ளி விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், புருலியா - திருநெல்வேலி விரைவு ரயில்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் அனுவ்ரத் விரைவு ரயில், உத்திரபிரதேச மாநிலம், பனாரசில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் காசி தமிழ் விரைவு ரயில் ஆகிய விரைவு ரயில்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல, சம்பந்தப்பட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மாவட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement