ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஜவுளி துறையில் இலவச பயிற்சி

திருவள்ளூர், ஜூன் 10–

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி குறித்து, இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘தாட்கோ’ வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி, துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு, நான்கு மாதங்கள். இப்பயிற்சி, கோவை மாவட்டத்தில் நடைபெறுவதால், விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை முழுதும், தாட்கோவால் ஏற்கப்படும்.

பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பு வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், www.tahdco.com என்ற இணைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement