கல்வி துறைக்கு இயக்குநர்களை நியமிக்க மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை 

புதுச்சேரி: பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு இயக்குநர்களை நியமிக்க வேண்டும் என, புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி, கவர்னர், முதல்வர் மற்றும் கல்வி துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனு;

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் மாணவர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வி துறையில் இயக்குனர்கள் இல்லாத காரணத்தால், புகார் அளிக்க முடியாமல் பள்ளி, கல்லுாரிகள் கேட்கும் அதிக கட்டணங்களை கட்டி மாணவர்களை சேர்க்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

பள்ளி கல்வித் துறையின் கல்வி கட்டண குழு ஒரு ஆண்டுக்கு மேல்  நியமிக்கப்படாமல் உள்ளதால், தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு கட்டணங்களை வசூலிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஏன் கட்டணத்தை அதிகம் வசூலிக்கின்றீர்கள் என்று கேட்டால் கல்வி கட்டண குழு நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று தடையானை பெற்றுள்ளோம் என,  கூறுகின்றனர். இது குறித்து கல்வி கட்டண குழு அலுவலகத்தில் விசாரித்தால் எந்த தடையாணையும் விதிக்கவில்லை என்கின்றனர்.

எனவே, கவர்னர், முதல்வர் இதில் தலையிட்டு கல்வி கட்டண குழுவை நிர்ணயித்து கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். 

 கட்டண குழு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் அதிக வசூலித்திருந்தால் அதனை மாணவர்களிடம் திருப்பி அளிக்க செய்திட வேண்டும். பள்ளிக் கல்வித் துறைக்கும் உயர் கல்வித்துறைக்கும், தனித்தனியாக தமிழ் தெரிந்த இயக்குனர்களை நியமிக்க வேண்டும்.  கல்வி கட்டண குழுவையும் நியமித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement